அரியலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்வோர் மீது வழக்கு பதியப்பட வேண்டும்

*குழந்தைகள் பாதுகாப்பு குழு அறிவுறுத்தல்

அரியலூர் : அரியலூர் மாவட்ட பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும் என குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.அரியலூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கடந்த காலாண்டில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து கூராய்வு செய்யப்பட்டது.

அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை அனைத்து குழந்தைகள் இல்லங்களிலும் மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும் என்றும், மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு குழந்தைகள் இல்லத்தினை ஆய்வு செய்து குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யப்பட வேண்டுமென்றும், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கிராம மற்றும் வட்டார, பேரூராட்சி மற்றும் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் நடத்தப்பட்டு குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டுமென்றும், பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆட்படாமல் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வினை காவல்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆகியோருடன் இணைந்து வழங்கப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைக்கு PM care திட்டத்தில் ரூ.10 லட்சத்திற்கான ஆணையும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதி ரூ.5 லட்சத்திற்கான ஆணையும் வழங்கினார்.

குழந்தை திருமண குற்றங்களில் ஈடுபடுபவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டுமென்றும், குற்றங்கள் புரிவோர்கள் மீது காவல்துறையின் வாயிலாக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார். பிற்காப்புத்திட்டத்தில் பயனடையும் குழந்தைகளுக்கு தலைமை அலுவலகத்திலிருந்து விரைந்து நிதி பெற்று வழங்கிட அறிவுறுத்தினார்.

குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதிக்குழும வழக்குகள் குறித்து கூராய்வு செய்து வழக்குகள் நிலுவையில் இல்லாமல் உடனுக்குடன் முடிக்கப்பட அறிவுறுத்தப்பட்டது. பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு பள்ளிக்கல்வி தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் குழந்தைகள் சார்ந்த பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்குமாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், காவல்துணை கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், குழந்தைகள் நலக்குழு தலைவர் மீனாட்சி, மாவட்ட சமூக நல அலுவலர் விக்னேஸ்வரி, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துக்கிருஷ்ணன் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: