*தினமும் பூஜை செய்து வழிபடுகின்றனர்
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மண்ணுக்குள் புதைந்த சிற்பத்தை பொதுமக்கள் மீட்டெடுத்தனர்.விழுப்புரம் அருகே ஏமப்பூர் கிராமத்தில் சோழர் காலத்தை சேர்ந்த வேதபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலுக்கு அருகே கொற்றவை சிற்பம் ஒன்று காணப்படுகிறது. 8 கரங்களுடன் ஆயுதங்களை ஏந்தி அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கும் இக்கொற்றவை மிகப்பெரிய எருமை தலை மீது நின்றிருக்கிறாள். இந்த சிற்பம் பல்லவர் காலத்தை (கி.பி.8-9ம் நூற்றாண்டு) சேர்ந்ததாகும்.
1200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த பழமைவாய்ந்த கொற்றவை சிற்பம் கடந்த பல ஆண்டுகளாக மண்ணில் புதைந்த நிலையில் இருந்து வந்தது. சிறுவர்கள் இதன் மீது ஏறி விளையாடி வந்தனர்.
அருகில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறிய சாணக்கழிவுகள் சூழ்ந்து மிகவும் பரிதாபமான சூழலில் கொற்றவை சிற்பம் காணப்பட்டது. இந்நிலையில் கிராம மக்களின் முயற்சியால் அண்மையில் இந்த சிற்பம் மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கான்கிரீட்டால் ஆன பெரிய மேடை அமைக்கப்பட்டு அதன் மீது சிற்பம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. கொற்றவைக்கு தற்போது பூஜைகள் தவறாமல் நடந்து வருகின்றன. முன்பு வழிபாடு எதுவுமின்றி வெளிறிப் போய் வெள்ளை நிறத்தில் காட்சியளித்த கொற்றவை சிற்பம் தொடர் எண்ணெய் பூச்சு வழிபாட்டின் காரணமாக தற்போது கரிய நிறத்தில் பளிச்சென்று தெரிகிறது. ஏமப்பூர் கிராம மக்களின் இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறுகையில், வானூர் அருகே கரசானூர், விழுப்புரம் அருகே வெங்கந்தூர், வேடம்பட்டு உள்ளிட்ட பல இடங்களில் கொற்றவை சிற்பங்கள் ஏரி தண்ணீருக்குள் மூழ்கியும் மண்ணுக்குள் புதைந்தும் காணப்படுகின்றன.
சாமி மேலே வந்தால் கெட்டது நடக்கும் எனும் தவறான அச்சம் அப்பகுதியினர் மத்தியில் நிலவுவதால் இந்த நிலை நீடிக்கிறது. பழமைவாய்ந்த சிற்பங்கள் குறித்து தவறான நம்பிக்கை, அச்சத்தில் உள்ள பலருக்கும் இந்த நடவடிக்கை நல்லதொரு வழிகாட்டுதலாக அமைந்துள்ளது, என்றார்.
