2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று சென்னை வருகை: அண்ணாமலை மாற்றம்? அதிமுக கூட்டணியை இறுதி செய்கிறார்

சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2 நாட்கள் பயணமாக இன்று இரவு தனி விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். புதிய மாநில தலைவர், அதிமுக கூட்டணி குறித்து இறுதி முடிவுகளை அவர் எடுக்கிறார். பாஜ கூட்டணியில் இருந்த அதிமுக மக்களவை தேர்தலுக்கு முன்னர் வெளியேறியது. இனி எப்போதும் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தனர். ஆனால் திடீரென்று கடந்த மாதம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

அப்போது பல வழக்குகளை காட்டி, கூட்டணிக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக முன்னாள் நிர்வாகிகளையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தவர், அண்ணாமலையை மாற்ற வேண்டும். அதிமுக முன்னாள் நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது கோரிக்கையை அமித்ஷா ஏற்கவில்லை. சென்னை சென்று முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுங்கள் என்று அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரை வந்த மோடியை சந்திக்கும்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜ நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் சந்திக்கவில்லை. இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) இரவு டெல்லியில் இருந்து இந்திய கடலோர காவல்படை தனி விமானத்தில் புறப்பட்டு, இரவு 10.15 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு பாஜவினர் வரவேற்பு அளிக்கின்றனர். அந்த வரவேற்பை பெற்றுக் கொண்டு, கார் மூலம் புறப்பட்டு, கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

அமித்ஷா, மறுநாள் வெள்ளிக்கிழமை காலையிலிருந்து மாலை வரை நட்சத்திர ஓட்டலில் இருந்தபடியே, தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சி தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேச இருப்பதாகவும், அப்போது 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய சில முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலரை அவர் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு தமிழ்நாடு பாஜ கட்சி நிர்வாகிகள் பலரையும் சந்தித்து பேசுவார் என்றும், அப்போது தமிழ்நாட்டின் புதிய பாஜ தலைவர் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. பின்னர் மாலையில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான ஆடிட்டர் ஒருவரை சந்தித்துப் பேசுகிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகையை ஒட்டி, அவருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, சென்னை பழைய விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில், உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இதில், டெல்லியில் இருந்து அமித்ஷா பாதுகாப்புக்காக வந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், மிக முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும், அந்த கூட்டத்தில் அமித்ஷா சென்னை நிகழ்ச்சி குறித்து முழுமையாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும், அதோடு அமித்ஷா சென்னைக்கு வரும்போதும் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் போதும், விமான நிலையத்தில் அவரை வரவேற்க, வழியனுப்ப எத்தனை பேர், யார் யாரையெல்லாம் அனுமதிப்பது என்பது குறித்தும், முடிவு செய்யப்படும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

The post 2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று சென்னை வருகை: அண்ணாமலை மாற்றம்? அதிமுக கூட்டணியை இறுதி செய்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: