டிரம்ப் அதிரடியால் அதிர்ந்து நிற்கும் நாடுகள்: தொடங்கி விட்டது உலக வர்த்தக போர்: அமெரிக்க நிறுவனங்களுக்கும் ஆபத்தாக முடியும் அபாயம்

* அடுத்தடுத்த வரிவிதிப்பால் ஆட்டம் காணும் பொருளாதாரம்

2வது முறையாக வெற்றி பெற்று, அமெரிக்காவின் 47வது அதிபராக கடந்த ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்றார் டொனால்டு டிரம்ப். அடுத்த இரண்டே வாரங்களில் எண்ணற்ற கொள்கை மாற்றங்களை அதிரடியாக அறிவித்தார். டிரம்ப் மீண்டும் அதிபரானால் பொற்காலமாக இருக்கும் என கனவு கண்ட, ஆதரவு தந்த இந்தியர்களும் ஆடிப்போகும் அளவுக்கு அந்த அறிவிப்புகள் இருந்தன. விசா, கிரீன் கார்டு என எல்லாவற்றிலும் புதிய நடைமுறைகள், கெடுபிடிகள் என அத்தனை பேருக்கும் ஆப்பு வைக்கும் அளவுக்கு சரவெடி அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருந்தார். முந்தைய டிரம்ப் ஆட்சியில் இருந்தது போலவே, வர்த்தகப்போரும் ஆரம்பம் ஆனது.

முதன் முதலாக பிப்ரவரி 4ம் தேதி, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்தார். மேலும், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் இதே போன்று வரி விதிப்பதாக அறிவித்தார். அடுத்த கணமே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இருந்து பதிலடி வந்தது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்பதுதான் அந்த பதிலடி. ஆக, வர்த்தப்போர் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது.

பழிக்குப்பழி என்பது போல், வரிக்கு வரி என்ற டிரம்பின் அறிவிப்புகள் பல நாடுகளை சீண்டிப்பார்க்கும் நடவடிக்கையாக அமைந்து விட்டன. டிரம்பின் இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக, அந்தந்த நாடுகளின் நுண் பொருளாதாரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. விலை உயர்வு, பொருட்கள் சப்ளை பாதிப்பு, வெளிநாட்டு கரன்சி பரிமாற்றம் போன்றவை பாதிக்கக் கூடும். கனடா, மெக்சிகோ நாடுகளில் பொருளாதார பின்னடைவு ஏற்படும். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளில்கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதியாக குறையும்.

மெக்சிகோவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 சதவீதம் முதல் 0.6 சதவீதம் வரை சரியும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதுபோல் சீன பொருளாதாரம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 0.3 சதவீதம் குறையலாம் என கூறப்படுகிறது. இந்த வர்த்தகப்போவை தொடங்கி வைத்த அமெரிக்காவுக்கே பொருளாதார பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். அதாவது, அமெரிக்க பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 0.5 சதவீதம், அடுத்த ஆண்டில் 0.7 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் உலக அளவிலான பொருளாதாரம் 0.2 சதவீதம் அளவுக்கு சரியும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். டிரம்பின் தற்போதைய முக்கிய நோக்கம் சீனாவின் ஆட்டத்தை அடக்கி வைப்பது தான். டாலர் மதிப்பு குறையக்கூடாது. டாலர்தான் சர்வதேச வர்த்தகத்துக்கான பொது கரன்சியாக தொடர்ந்து இருக்கவேண்டும் என டிரம்ப் திட்டமிடுகிறார். சீனாவின் ஆட்டத்தை அடக்குவதோடு, ரஷ்யாவுக்கு நட்புக்கரம் நீட்டி வரும் டிரம்ப், சீன ஆதிக்கத்தை அடக்கினாலே அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உருவாகும் என்பது அதிபரின் கணக்காக உள்ளது.

சீனா மலிவு விலையில் பொருட்களை உற்பத்தி செய்வது அமெரிக்காவுக்கு சவாலானதாக உள்ளது. இதனால் தான் கார் நிறுவனங்கள் அமெரிக்காவில் தொழிற்சாலையை தொடங்க வேண்டும் என்பதற்காக வரி விதிப்பின் மூலம் கடும் நெருக்கடிகளை டிரம்ப் உருவாக்கியுள்ளார். இதனால்தான் இறக்குமதி செய்யும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை அறிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்க கார் உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதன்படி ஆட்குறைப்பு, விலையை அதிகரிப்பது, குறிப்பாக, அமெரிக்காவில் எந்த அளவுக்கு வரி உயர்த்தப்படுகிறதோ அதே அளவுக்கு வாகன உதிரி பாகங்கள் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன.

போக்ஸ் வேகன் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இதற்கான ஆயத்த நடவடிக்கைக்கு தயாராகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி, உற்பத்தியை நிறுத்தி தட்டுப்பாட்டை ஏற்படுத்தவும் திட்டங்கள் வகுத்துள்ளன. கார் உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரி விதித்தால் அமெரிக்காவில் கார் விலை உயரும் என பொருளாதார அமைப்புகள், சந்தை நிபுணர்கள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், மேற்கண்ட நடவடிக்கைகளை நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

நாடு கடத்துவதால் இழப்பு: வரி விதிப்பால் வர்த்தகப் போரை துவக்கியுள்ளது ஒரு புறம் இருக்க, உரிய ஆவணங்கள் இல்லாதவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையிலும் டிரம்ப் இறங்கினார். கடந்த 2022ம் ஆண்டின்படி, அமெரிக்காவில் சுமார் 83 லட்சம் பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்தனர். இவர்கள் வீட்டு வேலை, சமையல், தச்சுவேலை, கட்டுமானம், விவசாயம் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்த தொழிலாளர்களில் இவர்கள் சுமார் 5 சதவீதம் மட்டுமே.

இந்த நிலையில் இவர்களை அதிபர் டிரம்ப் நாடு கடத்தி விட்டார். அமெரிக்க குடியுரிமை பெற்று தங்கியுள்ள ஜெர்மனியை சேர்ந்த குடும்பம் ஜெர்மனி சென்று வந்த பிறகு, அந்த குடும்பத்தில் குடும்பத் தலைவி தவிர அனைவரும் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். குடும்ப தலைவி மீது பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செக்மோசடி வழக்கை சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது. அந்த அளவுக்கு கெடுபிடி இறுகியுள்ளது. இதனால் வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் திண்டாட்டம் ஏற்படும் எனவும், இந்த பணிகளுக்கு இனி அதிக சம்பளத்துக்கு ஆட்களை நியமிக்க வேண்டிய நிலை உருவாகும், செலவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, இதனால் அமெரிக்காவுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் ஜிடிபியில் 2.6 சதவீதம் இழப்பு ஏற்படும் என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். இது மட்டுமின்றி, அமெரிக்க பெடரல் வங்கி பண வீக்கத்தை குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தும் வகையில் டிரம்பின் செயல்பாடுகளால் ஏற்பட்ட அரசியல் அழுத்தம் அமையும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களும், வேலைக்காக வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்களும் அமெரிக்க வேலை வாய்ப்புகளை பறிக்கின்றனர் என்பது டிரம்பின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

ஆனால், ஒரு காலத்தில் அமெரிக்கா உற்பத்தியில் சிறந்திருந்தது. ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் அதிகம் நிகழ்ந்தன. தற்போது சில பொருட்களின் உற்பத்தியில் வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதாவது சில அமெரிக்க நிறுவனங்களே வெளிநாட்டில் உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இந்த வரி விதிப்பு மூலம் இந்த நிலை மாறி அமெரிக்காவில் உற்பத்தி செய்ய அந்த நிறுவனங்கள் முன்வரலாம் என்பது டிரம்பின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால், உலக நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறிதான் வரி விதிப்பால் அமெரிக்காவை சார்ந்துள்ள, அதனுடன் வர்த்தகம் செய்து வரும் உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும் என்பதோடு, எதிர்மறை விளைவாக, அமெரிக்காவில் பண வீக்கம், இதனால் டிரம்புக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.

உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு 13 சதவீதம் மட்டுமே. ஆனால், ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 38 சதவீதம். ஐரோப்பிய நாடுகள், உலக வர்த்தகத்தில் 35 சதவீத பங்களிப்பு கொண்டுள்ள ஆசிய நாடுகளுடன் கைகோர்த்தால் அமெரிக்காவின் ஆதிக்கம் ஆட்டம் காணும் ஆபத்தும் ஏற்படலாம் என்பது பல பொருளாதார, சந்தை நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

* நிக்ஸன் வழியில் டிரம்ப்
1971ம் ஆண்டில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஹென்றி கிஸ்ஸிங்கர், பீஜிங்கில் சீன பிரதமர் சோ என்லாயை ரகசியமாக சந்தித்து பேசினார். 1949ல் சீனா சுதந்திரம் பெற்றதிலிருந்து 22 ஆண்டுகளாக, அமெரிக்கா சீனா இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. தைவானை மட்டுமே அமெரிக்கா அங்கீகரித்தது. இருப்பினும், பிப்ரவரி 1972 ல், அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் சீனாவுக்கு ஒருவாரம் சென்றபோது, கிஸ்ஸிங்கரின் ரகசிய நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்தது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுதான் நிக்சனின் தாரக மந்திரமாக இருந்தது. சீனாவை தன்பக்கம் இழுப்பதன் மூலம் ரஷ்யாவை பலவீனப்படுத்துவதுதான் அவரது திட்டம். ஆனால் சீனா அமெரிக்காவை பயன்படுத்தி முன்னேறி, அதன் போட்டியாளராகவே மாறி விட்டது. 1980 முதல் 2000 வரை, சீனா 4 உத்திகளை கையாண்டு, பொருளாதார நாடாக உயர்ந்தது. சீனா தனது விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கைப்பற்றி குறைந்த விலையில் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு வழங்கியது. இண்டாவதாக, சீனா தனது கரன்சி மதிப்பை செயற்கையாகக் குறைத்தது.

இதன்மூலம் குறைந்த டாலர்கள், அதிக யுவானுடன் அமெரிக்க முதலீட்டாளர்கள் தங்கள் தாய்நாட்டிற்கும் உலகிற்கும் ஏற்றுமதி செய்ய பெரும் தொழிற்சாலைகளை அமைத்தனர். மூன்றாவதாக, யுவான் மதிப்பு குறைப்பானது உள்நாட்டு நுகர்வோர் மீது விதிக்கப்படும் ஒரு பணவீக்க வரியைப் போன்றது . இறுதியாக சீனா தொழிலாளர்களின் ஊதியத்தை குறைத்து உற்பத்தி களத்துக்கு சாதகமானதாக மாற்றியது.

இதனால் ஏற்பட்ட பொருளாதார உபரியின் பெரும் பகுதியை அமெரிக்க கருவூலங்களில் செலுத்தியது. இது அமெரிக்காவில் வட்டி விகிதங்களைக் குறைத்தது. இதன் மூலம் நுகர்வு, முதலீடு அதிகரிப்பால் சீன பொருளாதாரம் வளர்ந்தது. துறைமுகங்கள், சாலைகள், பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் புதிய நகரங்கள் போன்ற உள்கட்டமைப்பை சீனா உருவாக்கியது. கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு அது பெருமளவில் செலவிட்டது. ஒரு கட்டத்தில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி முதலீடு செய்யப்பட்டது.

பின்னர் உலக உலக வர்த்தக அமைப்பில் இணைந்த சீனா , மலிவான ஆனால் உயர்தர பொருட்களை உற்பத்தி செய்யும் தனது தொழிற்சாலைகளை பயன்படுத்தி உலகளாவிய வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இன்று சீனாவை எதிரியாக்கிய டிரம்ப், ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் சீனாவுக்கு எதிரான வர்த்தகப்போரை ஆரம்பித்திருக்கிறார். ஆனால், இது சீனாவுக்கு பெரிய வாய்ப்புகளை பெற்றுத்தரும் சாதகமான நடவடிக்கையாக கூட அமையக்கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.

* அமெரிக்காவுக்கு பாதிப்பு
டிரம்ப் கடந்த முறை அதிபராக இருந்தபோதும் வரிகளை விதித்தார். இதனால் அமெரிக்காவில் எஃகு விலை 2.4 சதவீதமும், அலுமினியத்தின் விலை 1.6 சதவீதமும் உயர்ந்தது. இதுபால் 2018 தொடங்கி 2023ம் ஆண்டுகளுக்கு இடையே வரி அதிகரிப்பால் அமெரிக்காவில் வாஷிங் மெஷின் விலை 34 சதவீதம் உயர்ந்தது. இதே போன்ற நிலை தற்போதும் உருவாகும் என நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

* இந்தியாவுக்கு சாதகமாகுமா?
டிரம்பின் வரி விதிப்பால் இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுக்கு 54 சதவீதம், வியட்நாம் (46 சதவீதம்), தாய்லாந்து (36%), வங்கதேசம் (37%) வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதன்மூலம் ஜவுளி, மின்னணு சாதனங்கள் துறையில் இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகலாம் என குளாபல் டிரேடு ரிசர்ஜ் இனிஷியேட்டிவ் அமைப்பு தெரிவிக்கிறது. செமி கண்டக்டர் உற்பத்தியில் தைவான்தான் சிறந்த நாடாக இருக்கிறது. இருப்பினும் தைவானுக்கு எதிரான வரி விதிப்பால் இத்துறையில் இந்தியாவுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கக் கூடும்.

சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டை சேர்ந்த பெரிய நிறுவனங்கள், இந்தியாவின் போட்டியை தடுப்பதாக இருக்கின்றன. அந்த நாடுகளுக்கு அதிக வரி விதிப்பால் அவற்றின் செலவுகள் அதிகரிக்கும். இது இந்தியாவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி, சர்வதேச சந்தையில் போட்டியிடும் வாய்புகளை பெற்றுத்தரலாம். அதேநேரத்தில், டிரம்பின் புதிய வரி விதிப்புகளால் ஏற்றுமதியில் இந்தியாவின் போட்டி குறைந்து விடும் ஆபத்துகளும் காத்திருக்கின்றன என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

The post டிரம்ப் அதிரடியால் அதிர்ந்து நிற்கும் நாடுகள்: தொடங்கி விட்டது உலக வர்த்தக போர்: அமெரிக்க நிறுவனங்களுக்கும் ஆபத்தாக முடியும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: