* வீதிதோறும் தன்னெழுச்சியாக குவியும் மக்கள் n அடக்க முடியாமல் தவிக்கும் அதிபர் எர்டோகன் n 2028 தேர்தலை குறிவைத்து அடக்குமுறையா?
2028 அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தற்போதைய அதிபர் எர்டோகன் அறிவித்து விட்டார். ஆனாலும் அதிபர் எர்டோகனுக்கு எதிராக வீதிவீதியாக மக்கள் களம் இறங்கி போராடிக்கொண்டு இருக்கிறார்கள். காரணம் ஒரே ஒரு கைது தான். 2028 அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் வலுவான வேட்பாளராக களம் இறக்கப்பட உள்ள எக்ரெம் இமாமோக்லு கைதுதான் துருக்கியை தற்போது பதற்றத்திற்குள் தள்ளி விட்டு இருக்கிறது.
2014 முதல் அதிபர். அதற்கு முன்பு பிரதமர் பதவி வகித்து வந்த எர்டோகனுக்கு, இஸ்தான்புல் மேயராகவும், எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் முன்னணி தலைவராகவும் உள்ள எக்ரெம் இமாமோக்லுவுக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு கண்ணை உறுத்தியதால் தான் இந்த கைது. கடந்த மார்ச் 24ம் தேதி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி இமாமோக்லு மற்றும் அவரது உதவியாளர் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். துருக்கியே வெகுண்டெழுந்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் துருக்கி கண்டிராத மிகப்பெரிய போராட்டம் என்கிறார்கள் அங்குள்ளவர்கள். வீதிவீதியாக வந்து குவிந்த மக்களை கட்டுப்படுத்த முடியாமல் துருக்கி படை திணறுகிறது.
பெண்களும், ஆண்களும் ஆவேசமாக குரல் எழுப்புகிறார்கள். சுமார் 1900க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட பின்னரும் போராட்டம் வாரக்கணக்கில் நடக்கிறது. துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லின் மேயர் கைது உலக நாடுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று அவர்கள் தரப்பில் குரல் எழுந்துள்ளது. தனது கைது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இமாமோக்லு,’இது மக்களின் விருப்பத்துக்கு எதிரானது.
நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் என் இல்லத்துக்கு வெளியே குவிந்துள்ளனர். நான் என்னை மக்களிடம் ஒப்படைக்கிறேன்’ என்றார். மக்கள் அவருக்கு முழு ஆதரவு தெரிவித்து வீதியில் குவிந்து விட்டனர். துருக்கி இன்று வரை திண்டாடிக்கொண்டு இருக்கிறது. என்ன குற்றச்சாட்டு? கடந்த 1980களில் இருந்து துருக்கி அரசை எதிர்த்துப் போராடி வரும் குர்திஷ் தேசியவாத அமைப்பான பிகேகேவுக்கு உதவியதாகவும், ஊழல் செய்ததாகவும் இஸ்தான்புல் மேயர் இமாமோக்லு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் குடியரசு மக்கள் கட்சித் தலைவர் பதவியுடன், அதிபர் தேர்தலை நோக்கி இமாமோக்லு முன்னேறியதால் தான் அவர் கைது செய்யப்பட்டதாக குடியரசு மக்கள் கட்சி குற்றம்சாட்டியது. அதே சமயம் இமாமோக்லுவின் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற கருத்தை மறுத்துள்ள துருக்கி அரசு, குற்றவியல் அமைப்பை வழிநடத்துதல், லஞ்சம் வாங்குதல், மிரட்டிப் பணம் பறித்தல், தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாகப் பதிவு செய்தல், ஏலத்தில் மோசடி செய்தல் போன்ற பல்வேறு புகார்கள் அடிப்படையில் தான் மேயர் இமாமோக்லு கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தது.
* வீதியில் இறங்கிய மாணவர்கள்
இமாமோக்லு கைது விவகாரத்தில் எர்டோகனுக்கு எதிராக வீதியில் களம் இறங்கியவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் மற்றும் காவல்துறையினருடன் மோதல் ஏற்படலாம் என்பன போன்ற அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் அவர்கள் தொடர்ந்து சாலைகளில் இறங்கிப் போராடியுள்ளனர். எங்களை ஆள்வதற்கு யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அதிபர் எர்டோகன் அந்த உரிமையை எங்களிடமிருந்து பறிக்கிறார் என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபர் எர்டோகனை கேலி செய்யும் பதாகைகளை ஏந்தியதோடு, நீதி கோரி முழங்கினர். போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகை, மிளகுத் தூள், ரப்பர் தோட்டாக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினர். ஆனாலும் கூட்டம் கலையவில்லை. 1.5 கோடி வாக்குகள்: ஏனெனில் 2028ல் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக இமாமோக்லு மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் சூழல் இருந்தது.
ஏனென்றால், வேட்பாளர் பட்டியலில் அவர் மட்டுமே வேட்பாளராக இருந்தார். அவர் கைது செய்யப்பட்ட பிறகும் கூட 1.5 கோடி மக்கள் இமாமோக்லுவுக்கு ஆதரவாக அடையாள வாக்களிக்க வரிசையில் காத்திருந்தனர். இஸ்தான்புலில் நடந்த பேரணியில் பேசிய குடியரசு மக்கள் கட்சித் தலைவர் ஒஸ்குர் ஒசெல், அந்த வாக்குகளில் 16 லட்சம் வாக்குகள் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து வந்ததாகவும், மீதமுள்ளவை மக்களிடம் இருந்து அவருக்கு ஆதரவாகக் கிடைத்துள்ள வாக்குகள் எனவும் தெரிவித்தார்.
குடியரசு மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட மேயருக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஏனெனில் இமாமோக்லு கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் இஸ்தான்புல் மேயராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புலில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றார்.
பட்டம் ரத்து: அதிபர் தேர்தலில் இமாமோக்லு சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவது மற்றும் அதிபராகத் தேர்வு செய்யப்படுவதை இந்தக் கைது நடவடிக்கை தடுக்காது. ஆனால், அவர் மீதான ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டால், அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. அதற்கு வசதியாகத்தான் கடந்த மார்ச் 18 அன்று, இஸ்தான்புல் பல்கலைக்கழகம் அவரது பட்டத்தை ரத்து செய்தது. இது உறுதி செய்யப்பட்டால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தடுக்கப்படும்.
ஏனெனில் துருக்கியின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதிபர் பதவி வகிக்க பல்கலையில் பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும். இருப்பினும் அதிபர் வேட்பாளராக இமாமோக்லு தகுதியானவரா என்பதை துருக்கியின் உச்ச தேர்தல் கவுன்சில் முடிவு செய்யும். 5 பாராளுமன்ற மற்றும் 3 அதிபர் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள எர்டோகன், 25 ஆண்டுகளுக்கும் மேலாக துருக்கியில் ஆட்சியில் இருந்து வருகிறார். 2023ல் நடந்த அதிபர் தேர்தலில் எர்டோகன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 2028க்கு மேல் அவர் அதிபராக ஆட்சி செய்ய முடியாது. ஆனால், அவர் இன்னும் ஒரு முறை அதிபராகப் பதவியேற்பதற்காக அரசியலமைப்பை மாற்றக்கூடும் என்று அவரது விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், 81 மாகாணங்களில் 35 மாகாணங்களில் வெற்றி பெற்று 47 ஆண்டுகளில் முதல் முறையாக குடியரசு மக்கள் கட்சி முன்னணி கட்சியாக உருவெடுத்தது.
இந்த தேர்தல் முடிவுகள் தான் எர்டோகனின் ஏகேபி கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டது. இஸ்தான்புல் மேயர் இமாமோக்லு, 2023ல் களமிறக்கப்பட்ட குடியரசு மக்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் கெமல் கிலிக்டரோக்லுவை விட மிகவும் பிரபலமான தலைவர். எனவே தான் எர்டோகன் பதவிக்காலம் 2028 வரை இருந்தாலும், அவரை பதவியில் இருந்து நீக்க இப்போதே தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். துருக்கியில் நடந்து வரும் போராட்டங்கள் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
* யார் இந்த எர்டோகன்?
* துருக்கி அதிபர் எர்டோகன் 1954 பிப்.26ல் இஸ்தான்புல் பியோக்லுவில் பிறந்தவர்.
* 1994ல் இஸ்தான்புல் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
* 2003 முதல் 2014 வரை துருக்கி பிரதமராக இருந்தவர்.
* 2014 வரை தற்போது வரை துருக்கி அதிபராக உள்ளார்.
* 2028 வரை அவரது பதவிக்காலம் உள்ளது.
* அரசியல் சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட இஸ்தான்புல் மேயர் இமாமோக்லு மாமாரா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மோசமான சிலிவ்ரி சிறைச்சாலை என்று இந்தச் சிறை முன்பு அறியப்பட்டது. 11,000 கைதிகளை அடைக்க வடிவமைக்கப்பட்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய சிறைச்சாலையாக இது குறிப்பிடப்படுகிறது. ஆனால், துருக்கிய கிராண்ட் நேஷனல் அசெம்பிளியின் மனித உரிமைகள் புலனாய்வுக் குழு 2019ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், இதில் 22,781 கைதிகள் இருந்ததாகத் தெரிவித்தது. அரசை விமர்சிப்பவர்கள் தொடர்ச்சியாக அங்கு அடைத்து வைக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இமாமோக்லுவும் அந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
The post இஸ்தான்புல் மேயர் கைதால் வெடித்தது போராட்டம்; துருக்கியில் என்ன தான் நடக்கிறது? appeared first on Dinakaran.