30 ஆண்டுகளாக திருத்தப்படாத பெண்கள் துன்புறுத்தல் தடை சட்டத் திருத்தத்தால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்த வடக்கு மண்டல போலீசார்: தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு

* சிறப்பு செய்தி
கடந்த முப்பது ஆண்டுகளாக திருத்தப்படாத பெண்கள் துன்புறுத்தல் தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி மாதம் திருத்தியுள்ளது. இந்த சட்டத்தை வடக்கு மண்டல போலீசார் அமல்படுத்தியதால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பெண்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ‘‘பருவம் பார்த்து பயிர்செய்” என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் 1998 ஜூலை 19ல் இயற்றப்பெற்ற சட்டத்தை மாற்றி அமைத்து இன்றைய நவீன உலகில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் சைபர் அச்சுறுத்தலை தடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக பாதுகாப்பு அம்சத்தை உள்ளடக்கிய சட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசு இயற்றியுள்ளது. இந்தச் சட்டம் கடந்த ஜனவரி மாதம் இயற்றப்பட்டது.

பெண்களுக்கான பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கிட நாட்டிலேயே முதல் முறையாக, பெண்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர் மின்னணு வழிமுறைகள் உட்பட எந்த வடிவத்திலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட பெண்களுடன் அல்லது அவர்களை சார்ந்தவர்களுடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதை சூழ்நிலைக்கேற்றாற் போல தேவையான கால அளவிற்கு தடுப்பதுடன், அதை மீறுபவர் அபராதத்துடன் தண்டிக்கப்படுவார் என்னும் புதிய சட்ட திருத்தத்தை தமிழகம் கொண்டு வந்துள்ளது.

இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் பணியில் வடக்கு மண்டல போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில், சரக டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்தனர். அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் தமிழக அரசின் புதிய சட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளனர். சட்டம் இயற்றியதோடு நிறுத்தாமல் நாட்டிலேயே முதல்முறையாக விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு குற்றம்சாட்டப்பட்ட நபரிடமிருந்து எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு அதற்கான பாதுகாப்பு ஆணையும் பெறப்பட்டது.

இதனை தொடர்ந்து கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்டங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களால் துன்புறுத்தப்பட்ட அல்லது தாக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாக உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி, ஒரு வருட காலத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சுமத்தப்பட்டவரோ அல்லது அவரது சார்பாக வேறு ஒருவரோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொள்வதை தடை செய்து பாதுகாப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், பொன்னேரிக்கரை காவல்நிலையத்தில் 15 வயதுடைய சிறுமியை குற்றம் சாட்டப்பட்டவர் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும், சிறுமியின் தந்தையை கொலை செய்து விடுவதாக மிரட்டி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதன்பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது கடந்த பிப்ரவரி 7ம் தேதி வழக்குபதிவு செய்யப்பட்டு பிப்ரவரி 8ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு மார்ச் 11ம் தேதி முதல் ஓராண்டுக்கான பாதுகாப்பு ஆணை பெறப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்தில் 15 வயதுடைய சிறுமியை வீட்டிலிருந்து கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்பேரில் குற்றம்சாட்டப்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சிறுமியின் குடும்பத்தினரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு ஓராண்டுக்கான பாதுகாப்பு ஆணை பெறப்பட்டது. அதைப்போன்று விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சிறுமியின் குடும்பத்தினரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு ஓராண்டுக்கான பாதுகாப்பு ஆணை பெறப்பட்டது. அதேபோன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் காவல்நிலையம், வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் காவல் நிலையம், அரியூர் காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு ஓராண்டுக்கான பாதுகாப்பு ஆணை பெறப்பட்டது.

இவ்வாறு வடக்கு மண்டலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் குற்றவாளிகள் மீண்டும் ஒரு முறை பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொள்ளவோ, வழக்கு விசாரணையை தடுக்கவோ, மிரட்டவோ முடியாமல் போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதனால் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு கொண்டு வந்த இந்தச் சட்டத்தை வடக்கு மண்டல போலீசார் கடைப்பிடித்துள்ளதோடு, பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளதற்கும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

* வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதிவு செய்யப்படப் போகிறது…..
தமிழக அரசு இயற்றியுள்ள இந்த புதிய சட்டத்தின் மூலம் பெண்கள் நிமிர்ந்த நன்னடையுடன், எதிர்காலத்தை நோக்கி நேர்கொண்ட பார்வையுடனும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடனும், தலை நிமிர்ந்த ஞானச் செறுக்குடன் வாழ்தலை உறுதி செய்துள்ளதால், இந்திய பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பு சட்டத்தில் முதல்வரியாக மட்டுமல்லாமல், முகவரியாகவும் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதிவு செய்யப்படப் போகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.

The post 30 ஆண்டுகளாக திருத்தப்படாத பெண்கள் துன்புறுத்தல் தடை சட்டத் திருத்தத்தால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்த வடக்கு மண்டல போலீசார்: தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: