அமைச்சர்கள் எம்எல்ஏக்களை வீழ்த்திய ஹனி டிராப் அஸ்திரம்: 48 பேரின் ஆபாச சிடி… ஆட்டம் காணும் கர்நாடக அரசியல்…

ஹனி டிராப் என்ற சொல் தற்போது கர்நாடக மாநிலத்தில் மட்டுமில்லாமல் தேசியளவில் பரபரப்பாக பேசப்படும் வார்த்தையாக உள்ளது. அரசியல், பதவி, பணம் அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காக காதல் அல்லது பாலியல் வலையை வீச பயன்படுத்தப்படுகிறது. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர், சமூகத்தில் சிறந்த நிலையில் உள்ளவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதிரிகள் பயன்படுத்தும் பிரம்மாஸ்திரமாக தற்போது மாறி விட்டது. அரசியல் மற்றும் தொழிலில் தங்களின் எதிரிகளிடம் இருந்து முக்கிய தகவல்கள் பெற்று கொள்வதற்காகவும், நற்பெயரை களங்கப்படுத்தி பழி தீர்க்கவும் இதுவே பிரதான உத்தியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி அரசுக்கு உளவு பார்த்தல், அரசியல் சூழ்ச்சி, மிரட்டி பணம் பறித்தல் அல்லது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

அரசியல் அல்லது தொழில் போட்டியில் எதிரிகளின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள உளவு பார்க்கும் ஒரு முகவர் பெண்களை பயன்படுத்தி, அவர் மூலம் முக்கியமான தகவல்களைப் பெற காதல் உறவில் ஈடுபடுத்துவது. தொழில் போட்டியில் நேரடியாக மோதி வெல்ல முடியாது என்பதால், ஹனி டிராப் மூலம், அழகான பெண்களை அனுப்பி மயக்கி ரகசியங்களை கறந்து பிளாக் மெயில் செய்து காரியம் சாதித்து கொள்ள பயன்படுத்துகின்றனர். திரையுலகம் உள்ளிட்ட பிற துறை பிரபலங்களை வலையில் வீழ்த்தவும் இது பயன்படுத்தப்படுகிறது.

கர்நாடகாவில் வழக்கு: பாஜ ஆட்சியில் அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிஹோளியை குறிவைத்து கடந்த 2021ம் ஆண்டு ஹனி டிராப் நடந்தது. அவர் இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதனால் அவர் தனது அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. பெங்களூருவில் ஒரு கும்பல் தொழிலதிபர்களை வலையில் சிக்க வைக்க, ஒரு பெண் மூலம் அவர்களை தொடர்பு கொண்டு ஒரு இடத்திற்கு அழைத்து சென்று, பின்னர் போலீஸ் அதிகாரிகள் போல வேடமிட்டு மிரட்டி பணம் பறித்து வந்தனர். இது தொடர்பாக புட்டனஹள்ளி போலீஸ் நிலையத்தில் கடந்த 2023ல் பதிவான வழக்கில் ஹனி டிராப்பில் ஈடுபட்டதாக அப்துல் காதர், யாசின், நேஹாமேஹர் மற்றும் அவரின் காதலன் நதின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்தாண்டு முன்னாள் அமைச்சரும் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி பாஜ எம்எல்ஏ முனிரத்னாவுக்கு எதிராக ஹனி டிராப் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்படி மாநிலத்தில் கடந்த இரண்டாண்டுகளாக ஹனி டிராப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

அமைச்சர் ராஜண்ணா வாக்குமூலம்: கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 20ம் தேதி பாஜ எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் பேசும்போது, கூட்டுறவு துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணாவை ஹனி டிராப் செய்வதற்கான முயற்சி நடந்துள்ளது. இது மிகவும் கீழ்தரமான கலாச்சாரமாக உள்ளதுடன் மக்கள் பிரதிநிதிகளை பிளாக் மெயில் செய்யும் தந்திரமாக உள்ளது. இதை தடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற பிளாக் மெயில் செய்யும் மாபியா கும்பலை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்.

இதை தொடர்ந்து அமைச்சர் கே.என்.ராஜண்ணா பேசுகையில், ‘ ஹனி டிராப் பிளாக் மெயில் எனக்கு மட்டுமல்ல பலருக்கு நடந்துள்ளது. ஹனி டிராப் வலையில் சிக்கிய 48 எம்எல்ஏக்களின் சி.டி மற்றும் பென் டிரைவ் உள்ளது. இது நமது மாநிலத்தில் மட்டும் அல்ல, தேசிய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், நீதிபதிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக ஹனி டிராப் மோசடி நடந்துள்ளது. என் மீதான குற்றச்சாட்டிற்கு நான் இங்கு பதிலளிக்க மாட்டேன். இதுகுறித்து உள்துறை அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிப்பேன். இதை விசாரிக்க வேண்டும். இதற்கு பின்னணியில் இயங்கும் மோசடி கும்பல் யார்? நடிகர் தயாரிப்பாளர் யார், இயக்குனர் யார், இவை அனைத்தும் வெளிவர வேண்டும். அதனை மக்கள் அறிய வேண்டும்’ என்றார்.

அரசியல் வாழ்வு நாசம்: பேரவையில் தழுதழுத்த குரலில் பேசிய பாஜ உறுப்பினர் முனிரத்தினா, ‘பிரத்யங்கிரா தேவி, சனி பகவான், அஜ்ஜயாவின் உருவப்படத்தைக் காட்டி, நான் யாரையும் பலாத்காரம் செய்யவில்லை என்று சத்தியம் செய்கிறேன். என்மீது பொய் புகார் கொடுத்தவர்கள் சத்தியம் செய்ய தயாரா?. நான் தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள். என் வாழ்க்கையை சீரழிக்க என்ன செய்ய வேண்டுமோ , அதையெல்லாம் செய்துவிட்டார்கள். எனது பிள்ளைகள், பேரக்குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்வேன். அவர்கள் முகத்தை எப்படி பார்ப்பேன். வாழ்க்கையை சீரழிக்கவே இதுபோன்ற பலாத்கார வழக்குகளை பதிவு செய்கின்றனர். நான் எந்த கடவுள் மீதும் சத்தியம் செய்கிறேன். பொய் வழக்கு போட்டால், அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்வேன். ஆனால் இப்படி அசிங்கப்படுத்துவது என்ன நியாயம்.

முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா மற்றும் ரமேஷ் ஜார்கிஹோலி ஆகியோர் வாழ்க்கையும் இப்படித்தான் மோசடி கும்பல் நாசப்படுத்தினர். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்றார். இப்படி, கர்நாடக அரசியலையே ஆட்டிவைத்து விட்டது ஹனி டிராப் ஆயுதம். அரசியல்வாதிகள் மட்டுமல்ல…. அன்றாட வாழ்விலும் சாமானிய மக்கள் இதற்கு பலிகடா ஆகியுள்ளனர். பேஸ்புக்கில் நட்பாகியும், முன்பின் தெரியாத எண்ணில் இருந்து வீடியோவில் அழைத்தும் மயக்கி, அதையே வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இந்த ஏஐ காலத்தில் மோசடி எந்த வியூகத்தில் வேண்டுமானாலும் நம்மை நெருங்கலாம் என்பதை அறிந்து விழிப்புடன் அனைவரும் இருக்க வேண்டும்.

‘மாநிலத்தின் கவுரவ பிரச்னை’ எதிர்க்கட்சிகள் போர்கொடி: கர்நாடாவில் 48 பேர் மீதான ஹனி டிராப் புகார் இருப்பதாகவும் அதற்கான ஆதாரம் சி.டி மற்றும் பென்டிரைவ் வடிவில் இருப்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா கூறிய கருத்தை ஆயுதமாக எடுத்து கொண்டு பாஜ மற்றும் மஜத உறுப்பினர்கள், ஹனி டிராப் என்ற பெயரில் மக்கள் பிரதிநிதிகளை மிரட்டுவது சரியல்ல. இது நமது கலாச்சாரத்திற்கும் ஏற்புடையதல்ல. எக்காரணம் கொண்டும் இதுபோன்ற கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தகூடாது. 48 பேர் மீது ஹனி டிராப் புகார் உள்ளதாக அமைச்சர் கே.என்.ராஜண்ணா கூறியுள்ளதற்கு மாநில உள்துறை அமைச்சர் பதில் கொடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்கால தலைமுறையினரிடம் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் நினைக்கவில்லையா? ஒருவேளை ஹனி டிராப் செய்வோருக்கு மாநில அரசு மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறதா? அல்லது ஹனி டிராப் செயலை ஊக்கப்படுத்தி வரும் அமைச்சர் யார்? ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் யார் மீது ஹனி டிராப் புகார் உள்ளது. அதேபோல், பாஜவை சேர்ந்த தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் யார் மீது புகார் உள்ளது என்பது தெரிய வேண்டும்.

இது மாநிலத்தின் கவுரவ பிரச்னை, இத்தகைய ஈன செயலின் பின்னால் எந்த சக்தி இயங்குகிறது. அமைச்சரையே ஹனி டிராப் செய்கிறார்கள் என்றால், அதன் பின்னால் இருப்பவர்கள் சாதாரண மனிதராக இருக்க முடியாது. இது அரசியல் ரீதியான பிரச்னை கிடையாது. தனி மனிதரின் கவுரவத்தை பாதிக்கும் பிரச்னை. இதை தடுக்காமல் விட்டால், எதிர்காலத்தில் வேறு என்னென்ன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி மிரட்டுவார்கள் என்பது தெரியாது.
மாநில அரசின் பொறுப்பான அமைச்சரே ஹனி டிராப் தொடர்பாக சிறப்பு விசாரணை படை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். உண்மை நிலை தெரிய வேண்டுமானால் தற்போது பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும். இதன் மூலம் ஹனி டிராப்பால் பாதிக்கப்பட்டவர்கள், எதிர்காலத்தில் பாதிக்கப்படுவோருக்கும் நியாயம் கிடைக்கும் என்று பாஜ தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

சட்டம் சொல்வது என்ன? ஹனி டிராப் வழக்குகளுக்கு பிஎன்எஸ் பிரிவு இல்லை, ஏனெனில் இது வரையறுக்கப்பட்ட குற்றத்திற்குப் பதிலாக ஒரு தந்திரோபாயம். அதற்கு பதிலாக, ஹினி டிராப் வழக்குகள் பொதுவாக எடுக்கப்பட்ட குறிப்பிட்ட நடவடிக்கைகளைப் பொறுத்து மிரட்டி பணம் பறித்தல், அச்சுறுத்தல் அல்லது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற தற்போதைய சட்டங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு வழக்கு தொடரப்படுகின்றன. பாரதிய நியாய சன்ஹிதா ஹனி டிராப்களுக்கு பிரத்யேக சட்டப்பிரிவை கொண்டிருக்கவில்லை.

மிரட்டி பணம் பறித்தல்: ஹனி டிராப்பில் மிரட்டல் அல்லது பணம் அல்லது சொத்துக்கான மிரட்டல் இருந்தால், மிரட்டி பணம் பறித்தல் (பிஎன்எஸ் பிரிவு 308) அல்லது மிரட்டி பணம் பறித்தல் பிரிவு 384 தொடர்பான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யலாம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: ஹனி டிராப்பில் பாலியல் வற்புறுத்தல் அல்லது சுரண்டலை உள்ளடக்கியிருந்தால், பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் அல்லது பின்தொடர்தல் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யலாம்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம்: ஹனி டிராப் ஒரு பெரிய குற்றவியல் வலையமைப்பு அல்லது சிண்டிகேட்டின் ஒரு பகுதியாக இருந்தால், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பான பிரிவுகளின் கீழ் பிஎன்எஸ் பிரிவு 111ன் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யலாம்.

சிறிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம்: ஹனி டிராப் ஒரு சிறிய குழுவை உள்ளடக்கியிருந்தால், சிறிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தின் கீழ் (பிஎன்எஸ் பிரிவு 112) குற்றச்சாட்டுகள் பதிவு செய்யலாம்.

* எங்கிருந்து வந்தது ‘ஹனி டிராப்’ சொல்?
பொதுவாக உலகில் உள்ள ஒவ்வொரு நாடும், எதிரி நாட்டின் செயல்பாடுகளை கண்காணித்து தகவல் பெறுவதற்காக ரகசியமான உளவு அமைப்பு வைத்துள்ளனர். அதன்படி, பிரிட்டிஷ் அரசாங்கம், தங்களின் எதிரி நாடுகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக, அந்நாட்டு உளவு துறையில் ஒரு பிரிவாக ‘‘ஹனி டிராப்’’ என்ற குழுவை அமைத்தது. இதுவே தற்போது ஹனி டிராப் என்ற சொல்லாக வடிவெடுத்து பலரின் அந்தரங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஹனி டிராப் மூலம் உளவியல் ரீதியான தூண்டுதலை ஏற்படுத்தி சம்மந்தப்பட்டவரின் நம்பிக்கையை வெல்வதும், பின்னர் அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி மதிப்புமிக்க தகவல்களையோ அல்லது பிற நன்மைகளையோ பெறுவதாக உள்ளது. இப்படி இன்று நேற்றல்ல முந்தைய காலங்களிலும் ஹனி டிராப் வலையில் பலர் வீழ்ந்து தங்கள் பணம், பதவி, புகழை இழந்துள்ளனர். ஒரு சிலர் தங்கள் உயிரையே மாய்த்துக்கொண்ட அவலமும் அரங்கேறியுள்ளது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் நடந்துள்ளது. நாட்டின் ராணுவ ரகசியங்களை பெறுவதற்கும் ஹனி டிராப் நடந்துள்ளது. இந்த நடைமுறை கர்நாடக மாநிலத்தில் பல்வேறு கோணங்களில் அரங்கேறியுள்ளது.

* வலை வீச பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்கள்
தற்போதைய இணைய மற்றும் சமூக ஊடக காலத்தில், ஹனி டிராப் முறையும் மாறிவிட்டது. தற்போது பெரும்பாலான ஹனி டிராப், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலமாக நடக்கிறது. ஹனி டிராப்பில் ஈடுபடும் நபர்கள் பெண்களின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் கணக்கு தொடங்கி, தங்கள் இலக்கைக் குறிவைக்கின்றனர். அவர்களுடன் நட்பாகப் பழகி, காதலிப்பது போல் நடித்து, பாலியல் ரீதியாக மயக்கி, அவர்களிடம் இருந்து ரகசிய தகவல்களைப் பெறுகின்றனர். இதில், சாதாரண நபர்களிடம் பணமும் முக்கிய பிரமுகர்களிடம் ராணுவம் அல்லது தேசப் பாதுகாப்பு தொடர்பான ரகசிய விஷயங்களும் பெறப்படுகின்றன.

* சமூக ஊடக குற்றம்
ஹனி டிராப் கொள்ளை என்பது சமூக ஊடகங்கள் மூலம் இயக்கப்படும் ஒரு குற்றமாகும். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பைத் தொடங்க டேட்டிங் தளங்கள் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் போலி சுயவிவரங்கள் உருவாக்கப்படுகின்றன. சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு, சந்தேக நபர்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் நேருக்கு நேர் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

* பழங்காலத்தில் ஹனி டிராப்
வரலாற்றை திரும்பிப் பார்த்தால் ரகசிய தகவல்களைப் பெற பழங்காலத்திலேயே பெண்கள் பயன்படுத்தப்பட்டதைக் காண முடியும். எந்த மாதிரியான பெண்களை உளவு பார்க்க பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஷமேற்றி எதிரிகளைக் கொல்ல பெண்களைப் பயன்படுத்தும் ‘விஷ கன்யா’ என்ற முறை மவுரியர் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

* ஹனி டிராப்பில் ஆண்கள்
பொதுவாக ஹனி டிராப்பில் பெண்கள்தான் ஈடுபடுத்தப்படுவார்கள் என்ற புரிதல் உள்ளது. ஆனால், ஆண்களும் அதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பனிப்போர் காலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியில் ஹனி டிராப்பில் ஆண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கிழக்கு ஜெர்மனி உருவாக்கிய ரோமியோ உளவாளிகள் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நிறைய ஆண்கள் உயிரிழந்ததால் தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களை கவர ஆண்கள் ஹனி டிராப் யுத்தியை கையாண்டனர்.

* இந்தியாவில் அதிகரிப்பு
சமீபகாலமாக இந்தியாவில் ஹனி டிராப் அதிகரித்து வருகிறது. கடந்த 2015 மற்றும் 2017க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையில் ஹனி டிராப் தொடர்பான ஐந்து வழக்குகள் பதிவாகியுள்ளதாக மாநிலங்களவையில் கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

The post அமைச்சர்கள் எம்எல்ஏக்களை வீழ்த்திய ஹனி டிராப் அஸ்திரம்: 48 பேரின் ஆபாச சிடி… ஆட்டம் காணும் கர்நாடக அரசியல்… appeared first on Dinakaran.

Related Stories: