2025- 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழ்நாட்டை உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக நிறுவிட ‘தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை 2025’ ஒன்றை அரசு அறிமுகப்படுத்தும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். கப்பல் மற்றும் படகு வடிவமைப்பு மற்றும் கப்பல் சட்டகம் கட்டுருவாக்கம், கப்பல் இயந்திர உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதை நோக்கங்களாக கொண்டு இப்புதிய கொள்கை அமைந்திடும் என அறிவித்தார்.
இத்தொழில் வருகையின் மூலம் கடலூர் மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 30,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என கூறினார் குறுசிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை வளர்ச்சிக்கும் இக்கொள்கை வித்திடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கப்பல் கட்டுமான துறைக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 2033ல் இந்தியாவில் கப்பல் கட்டுமான சந்தை 8 பில்லியன் டாலர் என்ற மதிப்பை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அதில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் இலக்கு.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கப்பல் கட்டுமானம் என்பது சங்க காலத்தில் இருந்தே இருக்கிறது. கப்பல் கட்டுமானமும், கப்பல் போக்குவரத்தும் நமது வரலாற்றுடன் தொடர்பு கொண்டது. கடலூர் துறைமுகம் இந்தியாவின் பழம்பெரும் துறைமுகங்களில் ஒன்றாகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களின் வியாபார தலைநகரமாக கடலூர் துறைமுகம் விளங்கியது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் தென் இந்தியாவின் முதல் தலைநகரமாக விளங்கியது. தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அவர்கள் அதிகளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
சரக்கு போக்குவரத்திற்காகவும் அவர்கள் தங்கள் நாட்டுக்கு எளிதாக சென்று வரவும் கடலூர் துறைமுகத்தை பயன்படுத்தி வந்தனர். ஆசியாவில் உள்ள பழைமையான துறைமுகங்களில், கடலூர் துறைமுகமும் ஒன்று. பரவனாறு, உப்பனாறு ஆகியவை கடலில் கலக்கும் இடத்தில் 142 ஏக்கர் பரப்பளவில் கடலூர் துறைமுகம் அமைந்துள்ளது. கரையிலிருந்து ஒரு மைல் தூரத்திலேயே இயற்கையாகவே 15 மீட்டர் ஆழம் இருப்பதால், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருந்தது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் 2002க்கு பிறகு, இந்த துறைமுகத்திற்கு கப்பல் வருகை நிறுத்தப்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டு ஒன்றிய- மாநில அரசுகளின் பங்களிப்புடன் சாகர்மாலா திட்டத்தில், கடலூர் துறைமுகத்தை ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்த ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் இரண்டு கப்பல்கள் நிறுத்தும் தளங்கள் அமைக்கும் வகையில் முகத்துவாரப் பகுதியில் இருந்து பரவனாறு வரை 1,700 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலம், தூர் வாரி ஆழப்படுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய துறைமுகம் திறக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. கூடிய விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்தும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக நிதிநிலை அறிக்கையில் கடலூர் துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலூரில் தனியார் மூலம் கோட்டியா எனப்படும் பெரிய அளவிலான படகுகள் செய்யப்பட்டு வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அரசு சார்பில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும் பட்சத்தில் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு இங்கிருந்து கப்பல்கள் தயாரித்து அனுப்பப்படுவதால் அந்நிய செலாவணி பெருகும். 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த கப்பல் கட்டும் தளத்துக்கு விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்ட பிறகு முறையாக டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடலூர் துறைமுகத்தில் சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பில் பசுமை துறைமுகம் அமைக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே கடலூரில் துறைமுகம் அமைக்கப்பட்டு அது பயன்பாட்டில் உள்ளது. வரும் காலத்தில் பசுமை துறைமுகமும் கப்பல் கட்டும் தளமும் வரும் பட்சத்தில் கடலூர் மாவட்டம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு வளர்ச்சி அடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும் கடலூர் சில்வர் பீச்சை நீலக் கொடி கடற்கரை சான்றிதழ் பெறும் கடற்கரையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம், துறைமுக வளர்ச்சியை கொண்டு பல்வேறு தொழிற்சாலைகளுடன் அமையப் பெற்றுள்ளது. குறிப்பாக அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் மூலம் தற்போது சுமார் 3.5 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் அனல்மின் நிலையங்கள் நிலக்கரி மூலமாகவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, தூத்துக்குடி துறைமுகம் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஆண்டுக்கு சுமார் 1600 கப்பல்கள் வரை வந்து செல்கின்றன. இங்கு கப்பல் கட்டும் தளமும் அமையுமானால் கூடுதலாக அந்நிய செலாவணியும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இங்கு கப்பல் கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் 550க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 3 ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டுப்படகுகள், வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் பராமரிப்பு, பழுதுபார்ப்பு உள்ளிட்டவற்றிற்காகவும், புதிய படகுகள் கட்டுமானத்திற்காகவும் தனியார் சார்பில் ஒரு சில கட்டுமான இடங்களும், பழுதுபார்க்கும் யார்டுகளுமே உள்ளன.
இதனால் அடுத்தடுத்து படகுகள் பழுது ஏற்பட்டாலும் கூட விரைவாகவும், துரிதமாகவும் படகுகளை பழுது பார்க்க முடியாத நிலை உள்ளது. புதிய இயந்திரங்கள், கருவிகள் வாங்கவும் பழுது நீக்கவும் வெளி மாநிலங்களுக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் நமது மாவட்டத்தில் படகுகள் கட்டுருவாக்கம் மற்றும் கட்டுமானம், இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில்களை துவக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். இந்தத் தொழில் வருகையின் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை வளர்ச்சிக்கும் இக்கொள்கை வித்திடும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பாக துறைமுகங்களின் அருகில் இந்த தொழில்களை நிறுவ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இவற்றிற்கான இடம் தேர்வு முடிந்ததும் பூர்வாங்க பணிகள் துவங்கும் என தெரிகிறது.
* கொழும்பு செல்வது குறையும்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 1,600 கப்பல்கள் வரை வந்து செல்கின்றன. மேலும் ஆண்டுதோறும் கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் கப்பல் கட்டும் தளம் அமைந்தால் கப்பல் பழுது பார்க்கும் தளமும் ஏற்படும் என்பதால் விரைவில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க வேண்டும். அதே நேரத்தில் தூத்துக்குடி துறைமுகம் வரும் கப்பல்களில் பழுது ஏற்பட்டால் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுவதால் அந்நிய செலாவணி பாதிக்கப்படுகிறது. இங்கேயே கப்பல் கட்டும் தளம் அமையும் போது பழுதுநீக்க கொழும்பு செல்வது குறையும்.
* கிடப்பில் போட்ட அதிமுக
கடந்த 2013 பட்ஜெட்டில் அப்போதைய அதிமுக அரசு, தனியார் பங்களிப்பு பொதுத்துறை வாயிலாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் கப்பல் கட்டும் தளம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ. 7 ஆயிரத்து 500 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும் என அறிவித்து இருந்தது. இதுகுறித்து தமிழக அரசு மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டிலும் தெரிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியின் அப்போதைய கலெக்டர் ரவிக்குமார் தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம் வடபாகம், வைப்பாறு மற்றும் பழையகாயல் உள்ளிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்பிறகு, ஒன்றிய கப்பல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இடத்தினை தேர்வு செய்வார்கள் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால், அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் ஆட்சி முடியும் வரை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post கடலூர், தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான தளம்: 30,000 பேருக்கு வேலை வாய்ப்பு appeared first on Dinakaran.