* மீனவர் வாழ்வாதாரத்தை உயர்த்த ரூ.576 கோடியில் முத்தான திட்டங்கள்
இந்தியா – இலங்கை இடையே கடல் எல்லையில் மீன்பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. படகுகளையும் பறிமுதல் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண தமிழக அரசு சார்பில், ஒன்றிய அரசுக்கு பலமுறை வலியுறுத்தியும் ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மீனவர்கள் பிரச்னையை தீர்ப்பதற்கான உரிய நடவடிக்கையை எடுக்காதது ஒட்டுமொத்த மீனவர்களையும் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கி உள்ளது. தொடர்ந்து தமிழக மீனவர்களின் பிரச்னையைக் கண்டு கொள்ளாமல் ஒன்றிய அரசு புறக்கணித்து வருகிறது.
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தமிழக மீனவர்களின் நலனுக்காகவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையிலும், தமிழக அரசு சார்பில் கடலோர மாவட்ட மீனவர்களுக்கு உட்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அதில், ‘‘மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தெற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடல் நோக்கி செல்வதற்கு வழிவகை செய்யும்பொருட்டு, தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இது செயல்படுத்தப்படும். ஏற்கனவே, ரூ.60 கோடி மதிப்பீட்டில் பாம்பன் பகுதியிலும் மற்றும் ரூ.150 கோடி மதிப்பீட்டில் குந்துக்கால் பகுதியிலும் மீன்பிடித் துறைமுகப் பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என அறிவிக்கப்பட்டது. இதுதவிர மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த சில புதிய வாழ்வாதாரத் திட்டங்களை செயல்படுத்திட சிறப்பு திட்டங்களையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இதில் கடற்பாசி வளர்ப்பு, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், விற்பனை தொடர்புடைய தொழில்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியுடன் தேவையான உபகரணங்கள் அளித்து தொழிலில் ஈடுபட சுமார் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.52 கோடியே 33 லட்சம் செலவில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கூண்டு முறையில் மீன் மற்றும் சேற்று நண்டு வளர்ப்பு, பதப்படுத்துதல், விற்பனை தொடர்புடைய தொழில்களை மீனவ சமுதாய மக்கள் மேற்கொள்ள ரூ.25 கோடியே 82 லட்சம் செலவில் உபகரணங்கள் வழங்கி, தொடர் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
மீன் பதப்படுத்துதல், மீன் உலர்த்தும் தொழில்நுட்பங்கள், தொழில்நுட்ப உபகரணங்களை அளித்தல் மற்றும் பயிற்சிகள் வழங்கி ஊக்குவிக்கும் திட்டம் என சுமார் 2,500 மீனவக் குடும்பங்களைச் சார்ந்த பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 90 லட்சம் செலவில் அமைய உள்ளது. சுமார் 15,300 மீனவர்களுக்கு, மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்கிட ரூ.20 கோடியே 55 லட்சம் செலவிடப்பட உள்ளது.
மீன் வளம் சார்ந்த மாற்று வாழ்வாதாரமான வலை பின்னுதல், வலை பழுதுபார்த்தல், படகு கட்டுமானத் தொழில், படகு பழுதுபார்த்தல், கருவாடு தயாரித்தல், வண்ண மீன் தொட்டிகள் தயாரித்தல், படகு ஓட்டுநர் பயிற்சி, கடல் சிப்பி அலங்கார பொருட்கள் தயாரித்தல் ஆகிய தொழில்கள் செய்ய ரூ.54 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 20,100 மீனவர்கள் பயன்பெறக் கூடிய வகையில் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மீன்வளம் சாராத பிற தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர குறிப்பாக, காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், வீட்டுமுறை மசாலா பொடிகள் தயாரித்தல், அழகுக்கலை பயிற்சி, சிறுதானிய உணவு தயாரித்தல் போன்ற பல்வேறு தொழில்கள் செய்ய சுமார் 14 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு, ரூ.53 கோடியே 62 லட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் மீன்வளத் துறை, மீனவர் கூட்டுறவு சங்கங்கள். மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் போன்ற பல்வேறு அமைப்புகளும், அரசு துறைகளும் இணைந்து இத்திட்டங்களைச் செயல்படுத்தும். இந்தத் திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைக்க திட்டக் கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் திட்டச் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்து மேம்படுத்தும் பொருட்டு, இந்திய பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பு செய்வதற்கு ஏதுவாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் ரூ.360 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.216.73 கோடி என மொத்தம் ரூ.576 கோடியே 73 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களால் மன்னார் வளைகுடா பகுதியை சார்ந்த மாவட்டங்களின் மீனவர்கள் பெரிதும் பயனடைந்து அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
மேலும் மீனவர்களின் குடும்பத்தினர் கூடுதல் வாய்ப்புகள் பெற்று அதிகமான பொருள் ஈட்ட வழிவகை ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், மீனவ நண்பராக இருந்து பல அற்புதமான திட்டங்களை அறித்துள்ளார். இலங்கை கடற்படையால் நாளுக்கு நாள் பெரும் சித்ரவதை, கைது நடவடிக்கையை தடுக்கும் வகையில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக பெருங்கடல் நோக்கி செல்லும் வகையில் தங்கச்சி மடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் இந்த அறிவிப்பு மீனவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
* புறக்கணிக்கும் ஒன்றிய அரசு
இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் நாகை ராஜேந்திர நாட்டார்: மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு முதல்வர் தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து வருகிறார். கச்சத்தீவை மீட்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு தமிழக அரசு என்றும் உறுதுணையாக உள்ளது. அதே நேரத்தில் ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும் மீனவர்களின் கோரிக்கையை புறக்கணிக்கின்றனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவிக்கிறது. ஆனால், தமிழக மீனவர்கள் சிறை தண்டனை அனுபவித்த பின்னரே விடுவிக்கப்படுகின்றனர்.
* தொலைநோக்கு பார்வையோடு…
தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் தஞ்சை தாஜுதீன்: மன்னார் வளைகுடா பகுதியில் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், மீனவர்கள் வலைகளை அறுத்து சேதப்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. இதை தடுக்கும் வகையில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக பெருங்கடல் நோக்கி செல்லும் வகையில் தங்கச்சி மடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மீனவர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
எல்லா காலங்களிலும் மீன்பிடி தொழில் லாபகரமாக இல்லாததை கணக்கில் கொண்டு தொலை நோக்கு பார்வையோடு மீனவர்களுக்கு மீன்வளம் சாராத தொழில் வாய்ப்புகளை உருவாக்க சுற்றுலா படகு இயக்குதல், கைவினை, பொருட்கள் தயாரித்தல், அழகுக்கலை பயிற்சி, சிறுதானிய உணவு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கான பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வயதான, உடல் உழைப்பில் அதிகம் ஈடுபட முடியாத மீனவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
* மீனவர்களின் பாதுகாப்பாளர் முதல்வர்
மீன்பிடி தொழிலாளர் யூனியன் தலைவர் திருவாரூர் யோகநாதன்: தமிழக முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இலங்கை கடற்படையினர் செய்யும் அத்துமீறலை கட்டுப்படுத்த தமிழக அரசு சில முன்னெடுப்புக்கள் எடுத்து வருவது பாராட்டுக்குரியது. அதேபோன்று கச்சத்தீவு பிரச்னையில் ஆர்வம் காட்டும் முதல்வர் இன்று ஒட்டுமொத்த தமிழக மீனவர்களின் பாதுகாப்பாளராக செயல்பட்டு வருவது பெருமையாக உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஆயிரக்கணக்கான மீனவர்கள் உள்ளனர். இங்கு இயற்கை வளம், மீன்வளம் ஆகியவைகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் இந்த பகுதியை மீன்வள சிறப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என நாங்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். இந்த நிலையில் தமிழக முதல்வரின் இந்த சிறப்பு அறிவிப்பு எங்களுக்கு ஆறுதலை தருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு திட்டமும் அமைந்துள்ளது.
The post தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுகம்: இலங்கையின் கைது நடவடிக்கையை தடுக்க தமிழக அரசு அதிரடி appeared first on Dinakaran.