இதனால் இந்த கால்வாயில் ஆண்டுதோறும் தண்ணீர் நிரம்பி இருக்கும். இதன் காரணமாக இங்குள்ள பக்கிங்காம் கால்வாயில் அதிகளவில் மீன்கள், இறால்கள், நத்தை, நண்டுகள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களும் அதிகளவில் வளர்ந்து வருகிறது. இந்த கால்வாயில் இருக்கும் உணவு பொருளை தேடி ஆண்டுதோறும் சீனா, ரஷ்யா, இலங்கை, நேபாளம், பர்மா, பாகிஸ்தான் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இப்பகுதிக்கு வருகின்றது.
இங்கு வரும் பறவை இனங்கள் இங்கேயே கூடுகட்டி முட்டையிட்டு பருவ கால தகவமைப்பு முடிந்தவுடன் மீண்டும் தங்களது நாடுகளுக்கே சென்று விடுகிறது. இப்பகுதியில் வரும் வெளிநாட்டு பறவையினங்கள் பாதுகாப்பு இல்லாமல் திறந்தவெளி பகுதிகளில் சுற்றித்திரியும் நிலை உள்ளது. இதுபோல் பாதுகாப்பு இல்லாமல் சுற்றித்திரியும் பறவைகளை ஒரு சிலர் வேட்டையாடியதாகவும் கூறுகின்றனர். இதன் காரணமாக இப்பகுதிக்கு வரும் பறவை இனங்களை பாதுகாக்க மரக்காணத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து முதற்கட்டமாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்த நிதியின் மூலம் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளான மாங்குரோவ் செடிகள் நடுதல், நீர் குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை வனத்துறையினர் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து மேற்கொண்டு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யாததால் அப்பணிகள் முழுமை பெறாத நிலையில் இருந்தது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கையின்போது மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து தமிழக முதலமைச்சருக்கும், அரசுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘மரக்காணம் பக்கிங்காம் கால்வாயின் இரு கரையோரங்களிலும் விவசாயம் செய்யக்கூடிய விளை நிலங்கள் சுமார் 2கிமீ தூரம் வரை நெல்சாகுபடி செய்கின்றோம்.
இப்பகுதியில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் வரும் பறவைகள் நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தி விடுகிறது. இதேபோல் பறவைகள் விளை நிலங்களில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க பக்கிங்காம் கால்வாய் அருகில் இருக்கும் வனப்பகுதியில் பறவைகளுக்கு தேவையான உணவு கட்டமைப்புகளை அமைக்க அரசு அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்’ என்றனர்.
மரக்காணம் பேரூராட்சி மன்ற தலைவர் வேதநாயகி ஆளவந்தார் கூறுகையில், ‘இங்கு பன்னாட்டு பறவைகள் மையம் அமைந்தால் இப்பகுதி சுற்றுலாத்தலமாக மாறும்.
இதனால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ளவர்களும் கூட சுற்றுலாவுக்காக இங்கு வருவார்கள். இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்து அதன்மூலம் வருவாயும் அதிகரிக்கும் நிலை உண்டாகும்’ என்றார். இயற்கை விவசாயி சீதாராமன் கூறுகையில், ‘மரக்காணம் பகுதியில் பன்னாட்டு பறவைகள் சரணாலயம் அமைந்தால் இப்பகுதி சுற்றுலாத்தலமாக மாறும்.
இதனால் உள்ளூர் விளைபொருட்களின் மதிப்பு கூடும். மேலும் இப்பகுதி வியாபார மையமாக மாறும். இதனால் இடம் மற்றும் விவசாய பொருட்களின் சந்தை மதிப்பு உயரும். இப்பகுதியில் எங்கள் இயற்கை விவசாயிகள் சார்பில் இயற்கை அக்ரோ டூரிசம் என்கின்ற சுற்றுலாத்தலம் உருவாக்கி வருகிறோம். தற்போது எங்கள் பகுதியில் பன்னாட்டு பறவைகள் சரணாலயம் அமைய உள்ளதால் எங்களுக்கான வளர்ச்சி கூடி அதனால் வருமானமும் பெருகக்கூடிய வாய்ப்புள்ளது’ என்றார்.
The post மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் சரணாலயம்: விவசாய சந்தை மதிப்பு கூடும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் appeared first on Dinakaran.