மதுரை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் கூடிய வகையில், போதுமான அளவில் சிப்காட் தொழில் பூங்காக்கள் இல்லையே என்ற பலரின் நீண்டகால ஏக்கத்தை போக்கிடும் வகையில் மிக பிரமாண்டமான முறையில் சிப்காட் தொழில் பூங்கா மதுரை மாவட்டத்தில் அமைகிறது. இங்கு தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைகிறது. இதற்கான அறிவிப்பு இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது.
மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை 38ல் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி அருகேயுள்ள வஞ்சிநகரம், பூதமங்கலம் மற்றும் கொடுக்கம்பட்டி ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கி அமைகிறது இந்த காலணி தொழிற்சாலை. இதற்கான நிலம் 278.36 ஏக்கர் பரப்பளவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. வஞ்சிநகரம் கிராமத்தில் 145.98 ஏக்கர் பரப்பளவிலும், பூதமங்கலத்தில் 121.40 ஏக்கரிலும், 10.98 ஏக்கர் பரப்பளவில் கொடுக்கம்பட்டி கிராமத்தில் இருந்தும் அமைகிறது. இந்த ஒட்டுமொத்த நிலமும் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து தான் அமைகிறது.
இதனால், இந்த திட்டத்தை நிறைவேற்ற நில ஆர்ஜிதம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது. மதுரை மாவட்டத்தின் கிராம பகுதிகளைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், சுற்றுப்பகுதியில் வசிப்போருக்கு எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பற்ற நிலையில் தொழிற்சாலைகளை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த சிப்காட் பூங்கா அமைகிறது. இந்த தொழில் பூங்கா அமைவதால் இந்தப் பகுதியின் அடிப்படை உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகிறது. சர்வதேச தரத்தினாலான சாலை வசதி, குடிநீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமையும்.
இந்த சாலைகள் 30 மீ அகலத்தில் சென்டர் மீடியனுடன் அமைகிறது. இந்த சாலை மட்டும் ரூ.16 கோடியில் அமைகிறது. மதுரை மாநகராட்சியில் இருந்து தினசரி 3 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த சிப்காட் பூங்காவில் பல்வேறு வகையான பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் உற்பத்திமையங்களை அமைக்கவுள்ளன. தமிழ்நாட்டில பரவலான தொழில் வளர்ச்சியை உருவாக்கி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள், அவரவர் பகுதியிலேயே உயர்ந்த வேலைவாய்ப்பை பெறுவதை நோக்கமாகக் கொண்டு தொழில் பூங்காக்கள் அமைக்கப்படுகிறது.
முதல்வர் தலைமையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடுகள் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான வெளிநாட்டு பயணங்களின் போது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொழிற்பேட்டைகளும், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் உருவாக்கப்படுகின்றன. மதுரை மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சூழல் பாதுகாப்புடன் உலகத் தரத்துடன் கூடிய கட்டமைப்பை கொண்டு இந்த தொழில் பூங்கா அமைகிறது. இந்த தொழில் பூங்கா மதுரை மாவட்டத்தினருக்கு மட்டுமின்றி தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதே நேரம், இந்த சிப்காட் தொழிற்பூங்காவிற்கான பூர்வாங்க பணிகள் வேகமெடுத்துள்ளன. உள்புற சாலைகள் அமைத்தல், கீழ்பகுதியில் தண்ணீரை கொண்டு செல்வதற்கான ஆர்சிசி பாக்ஸ் அமைத்தல், மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான கட்டமைப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் பணிகள் கிட்டதட்ட முடிந்துள்ளன. இதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல், உரம் மற்றும் கெமிக்கல் உள்ளிட்ட பொருட்களுக்கான நிறுவனங்கள் அமையும் வகையில் இந்த சிப்காட் பூங்கா அமைகிறது. மாவட்டத்தின் விவசாய உற்பத்தியில் நெல், சிறு தானியங்கள், பருப்பு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே,விவசாய விளைப்பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்களாக்குவதற்கான தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
தொழிற்சாலை பெருக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் இங்கு அமையவுள்ள நிறுவனங்களுக்கு அரசின் பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக வரிவிலக்கு, நிதி சலுகை உள்ளிட்டவையும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். குறிப்பாக உற்பத்தி பெருக்கம், ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான தொடர் நடவடிக்கைகள் இருக்கும். இங்கு தொழிற்சாலைகள் துவங்க சலுகை விலையில் நிலமும், தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு விலை குறைப்பும் வழங்கப்படவுள்ளது. ஒற்றை சாளர முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அனுமதி உள்ளிட்டவை சிரமமின்றி, உடனுக்குடன் வழங்கப்படும்.
கடலூரிலும்…..
கடலூர் மாவட்டம் கடல்சார்ந்த மாவட்டம் என்ற நிலைப்பாட்டில் சிப்காட் போன்ற பெருந்திட்ட வளாகங்களும் அடங்கியுள்ளது. சிப்காட் தொழிற்பேட்டை கடலூர் பகுதியில் 3 பிரதான பகுதிகளாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. சிப்காட் பிரிவு 1, 2 ஆகிய இரண்டிலும் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கும் நிலையில் 3வது பிரிவிலும் புதிதாக தொழிற்சாலைகள் துவங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கான பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக சிறப்பு அதிகாரிகளையும் நியமித்திருந்தது.
அதன்படி ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனத்தினருடன் பேச்சுவார்த்தையில் இடம்தேர்வு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 500 ஏக்கர் பரப்பளவில் புதிதாக தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் தற்போது நடந்து வருகிறது. இதுபோன்று சுமார் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறக்கூடிய வகையில் காலணி உற்பத்தி தொழிற்சாலைகள் அமைப்பதற்கான முதல்கட்ட பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.
தைவான், தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளின் காலணி தொழிற்சாலைகள் கள்ளக்குறிச்சி, மதுரை மேலூர், கடலூர் போன்ற இடங்களில் கொண்டுவர தமிழக அரசு முழுவீச்சில் தற்போது நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. கடலூர் அருகே கிராமப்பகுதிகளின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு ரூ.250 கோடியில் அதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் இதற்கான ஆய்வுப் பணிகளும் நடைபெற்றது.
அப்போது உள்ளூர் மக்களில் சிலர், காலணி தொழிற்சாலை துவக்கத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான சந்தேகங்களை எழுப்பியிருந்த நிலையில் இதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் சந்தேகங்களும் விடைகாணும் வகையில் சிறப்பு குழு அமைத்து அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் அங்கு காலணி தொழிற்சாலை அமையும் நிலையில் அந்த பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கனோருக்கு வேலை வாய்ப்பு பெருகுவதோடு கிராமங்களும் வளர்ச்சியடையும் சூழல் உருவாகியுள்ளது.
* கள்ளக்குறிச்சியில் காலணி திறன் பயிற்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த எ.சத்தனூர் தொழிற்பேட்டையில் ரூ.2,300 கோடியில் தைவான் நாட்டு நிறுனத்துடன் தோல் இல்லா காலணி தொழிற்சாலை அமைக்கும் பணிகள் தமிழக அரசுடன் ஒப்பந்தம் முடித்து ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. சுமார் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் திட்டமிட்டு அதற்கான சிறப்பு மையங்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்தாண்டு இறுதிக்குள் இதற்கான முதல் யூனிட்டை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ள காலணி திறன் பயிற்சி கூடம் இதையொட்டிய பகுதியிலோ அல்லது கள்ளக்குறிச்சியில் தனியாகவோ ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து காலணி திறன் பயிற்சி வசதியை சிப்காட் நிறுவனம் மூலம் மேற்கொள்ள தமிழக அரசு உத்தேசித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
The post கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை நனவாக்க புதிய காலணி தொழிற்சாலைகள்: மேலூர், கடலூரில் அமைகிறது appeared first on Dinakaran.