ஆனால் அதிமுக மீதான விமர்சனத்தை கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர். அதிமுகவினர் அண்ணாமலை மீதும், பாஜக தலைமையின் மீதும் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் தான் அதிமுக – பாஜ கூட்டணி இனிமேல் இல்லை என அதிரடியாக அறிவித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அண்ணாமலையைத்தான் எதிர்க்கிறோம்; பாஜவை அல்ல என தெரிவித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. இதன் மூலம் அண்ணாமலை அல்லாத பாஜ கூட்டணியை அதிமுக விரும்புகிறது என்பதை அதிமுக தலைவர்கள் தொடர்ந்து பதிவு செய்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் ஜெயலலிதா மீது அண்ணாமலை வைத்த விமர்சனம் பெரும் புயலை கிளப்பியது. தமிழகத்தில் ஊழல் செய்த காரணத்தால்தான் முன்னாள் முதலமைச்சர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார் என அண்ணாமலை தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைத்தான் அண்ணாமலை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் என அதிமுக தலைவர்கள் கொதித்தெழுந்தனர். இதனால் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேசியதாகக் கூறி அண்ணாமலை தெரிவித்த கருத்து அடுத்த சர்ச்சையை கிளப்பியது.
‘‘அண்ணாமலை இப்படியே ஆணவமாக பேசிக்கொண்டிருந்தால், கூட்டணி குறித்து ஒரு முடிவை எடுக்கவேண்டுமென தலைமைக்கு வலியுறுத்துவோம்” என்று முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பகிரங்கமாக சாடினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “கூட்டணியை பொருத்தவரை பாஜ, அதிமுகவுடன் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவெடுக்கப்படும். இதுதான் எங்கள் நிலைப்பாடு. இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சனம் செய்தால் கடுமையான விமர்சனங்களை அவர் சந்திக்க நேரிடும்.
ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற எந்தவொரு கருத்தையும் தன்மானமுள்ள எந்தவொரு அதிமுக தொண்டனும் ஏற்கமாட்டான். பாஜ தலைவருக்கே தகுதி இல்லாதவர் அண்ணாமலை. அதிமுக என்கிற சிங்கக்கூட்டத்தைப் பார்த்து அண்ணாமலை என்கிற சிறுநரி ஊளையிடுகிறது. தனியாக நின்றால் நோட்டாவுக்கும் கீழ்தான் அண்ணாமலை ஓட்டு வாங்குவார். அண்ணாமலை ஒரு வேஸ்ட் லக்கேஜ். அண்ணா, பெரியாரை பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதிலடி தந்த அண்ணாமலை, “கூட்டணியில் இருப்பதால் நான் யாருக்கும் அடிமை கிடையாது. தன்மானத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்யமுடியாது. அதற்கான அவசியமும் இல்லை. மோடியை முன்னிலை படுத்தித்தான் தேர்தலை எதிர்கொள்கிறோம். இதை அதிமுகவும் ஏற்றுக்கொண்டுள்ளது. எனக்கு யாருடனும் எந்த பிரச்சினையும் இல்லை. தமிழக பாஜவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நான் நேர்மையாக அரசியல் செய்கிறேன். என் நேர்மையை குறைசொன்னால் சும்மா விடமாட்டேன். பாஜவின் வளர்ச்சியைக்கண்டு பொறாமைப்படுகிறார்கள், என்றார்.
இப்படி பரஸ்பரம் விமர்சன கணைகள் பாய்ந்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அதிமுக பாஜ இடையே கூட்டணி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இனி பாஜவுடன் கூட்டணி என்பது அறவே கிடையாது என திட்டமிட்டமாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், எம்பி தேர்தலில் இரு கட்சிகளுக்கும் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து மீண்டும் அதிமுக உடன் கூட்டணி அமைப்பதற்கான ஆயத்த வேலையை பார்க்க தொடங்கியது பாஜ மேலிடம். எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்களின் அடுத்தடுத்த டெல்லி பயணங்கள் இதை உறுதிப்படுத்தவே செய்தன.
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கா விட்டாலும் எப்படியாவது அதிமுகவுடன் கூட்டணி சேர்த்து விட வேண்டும் என்பதில் பாஜ தலைமை துடிப்பாக உள்ளது. ஆனால் எடப்பாடி தன் வீறாப்பை குறைக்காமல் இருக்கவே, ரெய்டு உத்தியை கையில் எடுத்தது பாஜ. எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் வருமானவரித்துறை சோதனை பாய்ந்தது. இதனால் கொஞ்சம் ஆடிப்போனார் எடப்பாடி.
இதனால் பாஜ கூட்டணிக்கு வருவதற்கு சற்று இணங்கினார். ஆனால் இந்தக் கூட்டணி மீண்டும் உறுதியாவதற்கு ஒரே தடையாக உள்ளது அண்ணாமலை தான் என்பது அதிமுக தரப்பின் நிலைப்பாடாக தெரிகிறது. எனவேதான் அண்ணாமலையை பாஜ தலைமையில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமித்தால் பாஜவுடன் அதிமுக கைகோர்க்க தயாராக உள்ளதாக தெரிகிறது. அண்ணாமலையை இந்த அளவுக்கு அதிமுக வெறுப்பதற்கு காரணம் மகாராஷ்டிரா போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் என கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தவ தாக்கரே தலைமையிலான பிளவுபடாத சிவசேனாவும் பாஜவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்ற மோதலில், முதல்வர் பதவியை விட்டுத்தர பாஜ விரும்பவில்லை. இதனால் பாஜவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு உத்தவ் தாக்கரே வெளியேறினார். இதன்பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சியுடன் கூட்டணி சேர்ந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை அமைத்து ஆட்சி அமைத்து உத்தவ் தாக்கரே முதல்வரானார்.
ஆனால், அந்த ஆட்சி இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், உத்தவ் அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டேயை வைத்து ஆட்சியை கவிழ்த்தது பாஜ. ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் வெளியேறி பாஜவுடன் கூட்டணி சேர்ந்து மகாயுதி என்ற கூட்டணியை அமைத்து முதல்வரானார். தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வரானார். அடுத்த ஓராண்டில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் அந்த கட்சியை உடைத்துக் கொண்டு ஆதரவு எம்எல்ஏக்களுடன் வந்து மகாயுதி கூட்டணியில் இணைந்து துணை முதல்வரானார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இந்த முறையும் முதல்வர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தார் ஷிண்டே. ஆனால் அவரது ஆசையில் மண் விழுந்தது. ஆட்சி அமைக்க விடாமல் ஷிண்டே 10 நாட்களாக இழுத்தடித்த போதும் கடைசியில் அவரைப் பணிய வைத்து விட்டது பாஜ. தேவேந்திர பட்நவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார். ஷிண்டே துணை முதல்வரானார். உள்துறை உட்பட அவர் எதிர்பார்த்த முக்கிய துறைகளை கூட அவருக்கு தரவில்லை.
பாஜவுடன் உள்ள பழைய தொடர்பால், இந்த விஷயத்தை நன்கு உணர்ந்து வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தனக்கும் அந்த கதி வந்து விடக்கூடாது என்பதற்காக அண்ணாமலை அல்லாத பாஜவுடன் கைகோர்க்க விரும்புகிறார். இதனால்தான் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் அதிமுக தரப்பில் இருந்து ஓங்கி ஒலிக்க தொடங்கி இருக்கின்றன. பாஜ டெல்லி தலைமை உடனான பேச்சு வார்த்தையின் போது இந்த ஒற்றை நிபந்தனையை அதிமுக தலைவர்கள் அழுத்தம் திருத்தமாக முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்கு வங்கியை இழந்து நிற்கும் அதிமுக, பாஜவுடன் இணைந்தால் பலம் வந்துவிடும் என நம்புகிறது. பாஜவும் அதிமுக முதுகில் சவாரி செய்து சாதிக்க திட்டமிடுகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இதை நன்குணர்ந்த எடப்பாடி பழனிசாமி, ஷிண்டேவுக்கு நேர்ந்தது போல் மகாராஷ்டிரா கதை ரிபீட் ஆகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். பட்நவிஸ் போல அண்ணாமலையும் கூட்டணி கட்சியை கபளீகரம் செய்வதில் வல்லவர் என்கின்றனர்.
இதை யெல்லாம் மனதில் வைத்து தான் அண்ணாமலையை பார்த்து அஞ்சும் அதிமுக, அவரை கழற்றிவிட்டு தமிழக புதிய பாஜ தலைமையுடன் இணைய விருப்பம் காட்டுகிறது. இந்த சூழ்நிலையில் அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலையை பாஜ பலிகடா ஆக்குமா, அதிமுக நினைத்ததை சாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
* அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை …. காலம் காலமாக மாறாதிருக்கும் இந்த ‘மரபு’ அதிமுக பாஜ இடையேயான மறு பிணைப்புக்கும் அத்தாட்சியாக மாற இருப்பதற்கான சூழ்நிலைகள் தமிழக அரசியலில் சுழன்று கொண்டிருக்கின்றது. முஷ்டியை உயர்த்திக்கொண்ட கட்சிகள் கைகுலுக்கும் காலம் வரும்போது நாட்டு நலன், மாநில நலன் என்று ஏதாவது ஒரு பொது காரணம் சொல்லப்படுவதுண்டு.
ஆனால், இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணி மீண்டும் சாத்தியமாகுமா என்பது அண்ணாமலை என்ற ஒற்றைச் சொல்லில் சுழன்று கொண்டிருக்கிறது. கட்சியின் தமிழக தலைவராக அண்ணாமலை ஆன பிறகு, அரசியல் களமே அவரை மையமாக கொண்டு தான் நடந்து கொண்டிருக்கிறது என்ற உறுதியான முடிவுக்கு பாஜவினர் வந்திருந்தனர். நேர்மை தவறாத ஐபிஎஸ் அதிகாரி, கர்நாடக சிங்கம் என்றெல்லாம் பெரிய பெரிய பில்டப்களோடு அண்ணாமலையை களம் இறக்கியது பாஜ.
* அண்ணாமலையை இந்த அளவுக்கு அதிமுக வெறுப்பதற்கு காரணம் மகாராஷ்டிரா போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் என கூறப்படுகிறது. பாஜவுடன் உள்ள பழைய தொடர்பால், இந்த விஷயத்தை நன்கு உணர்ந்து வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தனக்கும் அந்த கதி வந்து விடக்கூடாது என்பதற்காக அண்ணாமலை அல்லாத பாஜவுடன் கைகோர்க்க விரும்புகிறார். இதனால்தான் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் அதிமுக தரப்பில் இருந்து ஓங்கி ஒலிக்க தொடங்கி இருக்கின்றன. பாஜ டெல்லி தலைமை உடனான பேச்சு வார்த்தையின் போது இந்த ஒற்றை நிபந்தனையை அதிமுக தலைவர்கள் அழுத்தம் திருத்தமாக முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
* சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கா விட்டாலும் எப்படியாவது அதிமுகவுடன் கூட்டணி சேர்த்து விட வேண்டும் என்பதில் பாஜ தலைமை துடிப்பாக உள்ளது. ஆனால் எடப்பாடி தன் வீறாப்பை குறைக்காமல் இருக்கவே, ரெய்டு உத்தியை கையில் எடுத்தது பாஜ. எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் வருமானவரித்துறை சோதனை பாய்ந்தது. இதனால் கொஞ்சம் ஆடிப்போனார் எடப்பாடி.
The post கூட்டணி உறுதியாக ஒற்றை நிபந்தனை; அண்ணாமலையை தூக்கி கடாசுவதில் எடப்பாடி குறியாக இருப்பது ஏன்? நினைத்ததை சாதிக்குமா அதிமுக appeared first on Dinakaran.