பாம்பன் புதிய ரயில் பாலத்தை நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி திறந்த வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். இதனைத்தொடர்ந்து 835 நாட்களுக்கு பின் நேற்று, மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில், திருச்சி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரும் சேது எக்ஸ்பிரஸ், சென்னை – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் வரும் பாம்பன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ராமேஸ்வரம் வந்து மறுமார்க்கமாக மீண்டும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. மேலும் வாரம் இரு முறை ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் அதி விரைவு ரயிலும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
இன்று (20497) ராமேஸ்வரம்-பெரோஸ்பூர் வாராந்திர விரைவு ரயில், ஏப்.9ம்தேதியில் இருந்து (22535) ராமேஸ்வரம்-பனாரஸ் வாராந்திர விரைவு ரயில், (16617) ராமேஸ்வரம்-கோவை அதிவிரைவு ரயில், ஏப்ரல் 10ம் தேதியில் இருந்து (16780) ராமேஸ்வரம்-திருப்பதி வாரம் இருமுறை விரைவு ரயில், ஏப்.11ம் தேதியிலிருந்து (16733) ராமேஸ்வரம்-ஓகா வாராந்திர விரைவு ரயில், ஏப்.13ம் தேதியிலிருந்து (20850) ராமேஸ்வரம்-புவனேஷ்வர் வாராந்திர விரைவு ரயில் ஆகியவை ராமேஸ்வரத்தில் இருந்து மீண்டும் இயக்கப்பட உள்ளது.
பழைய ரயில் பாலத்தில் 15 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயிலில் பயணம் செய்த பயணிகள், தற்போது புதிய பாலத்தில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் கடந்து சென்றதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். புதிய ரயில் பாலத்தை கடக்கும் போது பயணிகள் உற்சாகமாக செல்போனில் படம் எடுத்து புதிய பாலத்தின் பயண அனுபவத்தை பதிவு செய்தனர்.
சுமார் 26 மாதங்களுக்கு பிறகு மண்டபம்-ராமேஸ்வரம் இடையே பாம்பன் பாலம் வழியாக மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இதனால் புதிய பாலத்தில் பயணம் செய்து வந்த ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியோடு ராமேஸ்வரம் ரயில் நிலையம் வந்திறங்கினர். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் சேவை துவங்கப்பட்டதால் பயணிகள் நிறைந்து பரபரப்பாக காணப்பட்டது.
The post 835 நாட்களுக்கு பிறகு பாம்பன் புதிய பாலத்தில் முழுவீச்சில் ரயில்கள் இயக்கம்: பரபரப்பானது ராமேஸ்வரம் appeared first on Dinakaran.