மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு 221 ரன் குவிப்பு

மும்பை: மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவித்தது. ஐபிஎல் 18வது தொடரின் 20வது லீக் போட்டி, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. அதில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மும்பை அணியில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நேற்று சேர்க்கப்பட்டிருந்தார். முதலில் ஆடிய பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோஹ்லி களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய டிரென்ட் போல்ட்டின் முதல் பந்தில் பவுண்டரி விளாசிய பில் சால்ட், 2வது பந்தில் கிளீன் போல்டாகி அதிர்ச்சி தந்தார். பின், கோஹ்லியுடன், தேவ்தத் படிக்கல் இணை சேர்ந்தார்.

இந்த இணை, 2வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், விக்னேஷ் புத்துார் வீசிய பந்தில், தேவ்தத் படிக்கல் அவுட்டானார். அதைத் தொடர்ந்து, கோஹ்லியுடன், கேப்டன் ரஜத் படிதார் இணை சேர்ந்து ஆடினார். விக்னேஷ் வீசிய 9வது ஓவரின்போது, பிரம்மாண்ட சிக்சர் விளாசிய கோஹ்லி, அரை சதத்தை அநாயாசமாக கடந்தார். இந்த இணை அற்புதமாக ரன்களை குவித்துக்கொண்டிருந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா வீசிய 15வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட கோஹ்லி (42 பந்து, 2 சிக்சர், 8 பவுண்டரி, 67 ரன்) நமன் திர்ரிடம் கேட்ச் தந்து வெளியேறினார். பின் வந்த லியாம் லிவிங்ஸ்டோன், பாண்ட்யா வீசிய அதே ஓவரில், பும்ராவிடம் கேட்ச் தந்து ரன் எடுக்காமல் அவுட்டானார். பின், ஜிதேஷ் சர்மா களமிறங்கினார். இவர்கள் அற்புதமாக ஆடி ரன்களை குவித்தனர்.

19வது ஓவரில் படிதார் (42 பந்து, 67 ரன்) அவுட்டானார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவித்தது. ஜிதேஷ் சர்மா 40, டிம் டேவிட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில், டிரென்ட் போல்ட், பாண்ட்யா தலா 2, விக்னேஷ் ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

13,000 ரன் குவிப்பு; கோஹ்லி சாதனை
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணிக்காக நேற்று ஆடிய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, அற்புதமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவர் 17 ரன் அடித்தபோது, டி20 வரலாற்றில் 13,000 ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற அரிய சாதனையை படைத்தார். நேற்றைய போட்டிக்கு முன், கோஹ்லி, 402 டி20 போட்டிகளில் ஆடி, 12,983 ரன்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு 221 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: