பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் நெல் அறுவடை பணி துவக்கத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில், தென்னைக்கு அடுத்தபடியாக பல ஏக்கரில் நெல் சாகுபடி தொடர்ந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையின்போது முதல்போகமும், வடகிழக்கு பருவமழையின்போது 2ம் போகம் என, பருவமழையை பொறுத்து அடுத்தடுத்து நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆண்டிற்கு 2 முறை மொத்தம் 6,400 ஏக்கரில் சாகுபடி செய்யப்படும் நெல் நாற்று, சுமார் 4 மாதத்திற்குள் அறுவடை செய்யப்படுகிறது. சுமார் 8 ஆண்டுக்கு முன்புவரை வெளி மார்க்கெட்டில் குறிப்பிட்ட விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.
இருப்பினும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்ற வேதனை ஏற்படுத்தியது. இதையடுத்து, விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில், ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தற்காலிகமான நெல் கொள்முதல் நிலையம், ஆண்டுதோறும் 2 முறை துவங்கப்பட்டது.
இந்த நெல் கொள்முதல் நிலையம், இரு போகத்தின்போது நெல் அறுவடை நாட்களில் மட்டும் செயல்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் துவக்கத்தில் ஆனைமலை, கோட்டூர், ரமணமுதலிபுதூர், ஓடையக்குளம், குளப்பத்துகுளம் மற்றும் காரப்பட்டி, பள்ளிவிலங்கான், பெரியணை, அரியாபுரம், வடக்கலூர் ஆகிய வாய்க்கால் பகுதிகளிலும் விளை நிலங்களை உழவு செய்து நெல் நாற்று நடவு பணி மேற்கொள்ளப்பட்டது.
2ம்போக நெல், கடந்த மாதம் இறுதியில் நல்ல விளைச்சலடைந்தது. கடந்த வாரம் முதல் நெல் அறுவடையில் விவசாயிகள் இறங்கினர். நெல்லுக்கான உரிய விலை கிடைக்க, ஆனைமலை மற்றும் கோட்டூர் பகுதியில், மீண்டும் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை வைததனர்.
இதையடுத்து நேற்று, ஆனைமலையில், தற்காலிக அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. முதுநிலை மண்டல மேலாளர் பழனிக்குமார் தலைமை தாங்கி திறந்து வைத்தார். நெல் தரகட்டுப்பாட்டு அதிகாரி வனிதாமணி, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன சங்க செயலாளர் பட்டீஸ்வரன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தற்போது துவங்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கொண்டுவரும் சன்னரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2450ம், மோட்டா ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2405க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
இருப்பினும், ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலையாக அதிகரிக்க செய்ய வேண்டும் என்பது, விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஆனைமலையில், நிரந்தரமாக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், இந்த முறையும் தற்காலிக கொள்முதல் நிலையமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை அடுத்தடுத்து இருந்துள்ளதால், வரும் காலங்களில் இருபோக நெல் சாகுபடி தொடர்ந்திருக்கும். தற்போது தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆனைமலையில் நிரந்த கொள்முதல் நிலையமாக அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு குவிண்டல் நெல்லுக்குண்டான விலை ரூ.3 ஆயிரமாக நிர்ணயித்து கொடுக்க வேண்டும்’ என்றனர்.
The post 2ம் போக அறுவடை துவக்கத்தால் ஆனைமலையில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு appeared first on Dinakaran.