போக்குவரத்து நெரிசலில் நின்றபோது ஏடிஜிபி சங்கர் வாகனம் விபத்தில் சிக்கி அப்பளம்போல் நொறுங்கியது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

சென்னை: பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வரும் 19ம்தேதி நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விழா ஏற்பாடுகளை தொடர்ச்சியாக ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஏற்பாடுகளையும், முதல்வர் ரோடு ஷோ நடத்த உள்ள பாதையையும் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், 2வது நாளாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நேற்று காலை ஆய்வு செய்தார். முதல்வர் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தபின், சோழவரம் வழியே ஆவடியில் உள்ள அலுவலகத்திற்கு காவல் ஆணையர் சங்கர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சோழவரம் அடுத்த செம்புலிவரம் ஜிஎன்டி சாலை பகுதியில் நேற்று காலை 11.30 மணிக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆவடி மாநகர காவல் ஆணையர் வாகனம் நின்று கொண்டிருந்தது.

அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ஆணையரின் வாகனத்திற்கு பின்னால் நின்றிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியதில், அடுத்தடுத்த வாகனங்கள் காவல் ஆணையரின் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவல் ஆணையரின் கார் அப்பளம் போல நொறுங்கியது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக காவல் ஆணையர் சங்கர் உயிர் தப்பிய நிலையில் அவரது பாதுகாவலர் மாரி செல்வம் (30) காயம் அடைந்தார். தொடர்ந்து, போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி விபத்தில் காயமடைந்த காவலரை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

The post போக்குவரத்து நெரிசலில் நின்றபோது ஏடிஜிபி சங்கர் வாகனம் விபத்தில் சிக்கி அப்பளம்போல் நொறுங்கியது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Related Stories: