அவை முன்னவர் துரைமுருகன்: எதிர்க்கட்சி தலைவர் பேச வருகிற பொருள், நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அதுபற்றி பேச முடியாது. சபாநாயகர் அப்பாவு: 2018ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் தற்போதைய முதல்வர் ஒரு பொருள் (ஸ்டெர்லைட்) குறித்து பேசினார். அப்போதைய சபாநாயகர் தனபால் இந்த பிரச்னை நீதிமன்றத்தில் இருப்பதால், பேரவைக்குள் பேச முடியாது என்று கூறிவிட்டார். விதி 92/1ன்படி ஒரு பிரச்னை நீதிமன்றத்தில் இருந்தால் இங்கு பேச அனுமதியில்ைல. அதை பின்பற்றி தற்போதும் இந்த பிரச்னை குறித்து பேச அனுமதி கொடுக்க முடியாது. எதிர்க்கட்சி தலைவருக்கு எல்லாம் தெரிந்தும் பிரச்னை பண்ண வேண்டாம். அவை முன்னவர் பேசுகிறார். அவர் என்ன பேசுகிறார் என்று அமர்ந்து கேளுங்கள்.
அவை முன்னவர் துரைமுருகன்: விதியை பின்பற்றி தான் சட்டசபையில் பேச அனுமதிக்க முடியும்.
சபாநாயகர் அப்பாவுகாலையில் எனது அறைக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் இந்த பிரச்னை குறித்து பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினார். நான் அப்போதே பேச அனுமதி அளிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன்.
அமைச்சர் எ.வ.வேலு: 2019ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, ஒரு பிரச்னை குறித்து பேச எழுந்தார். அப்போது தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் அப்போதைய முதல்வர் இந்த பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளது, வழக்குக்கு குந்தகம் ஏற்படும் என்று பேச அனுமதிக்க முடியாது என்று சொன்னீர்கள். (தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் உள்ள பிரச்னை (டாஸ்மாக் விவகாரம்) குறித்து எடப்பாடி பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது).
அவை முன்னவர் துரைமுருகன்: எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக இருக்கும்போது மட்டும் நீதிமன்றம் சென்று தடை வாங்க வில்லையா?
இதை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஒரு அட்டையை தூக்கி பிடித்து அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மற்ற அதிமுக எம்எல்ஏக்களும் கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.
சபாநாயகர் அப்பாவு: அட்டையை வைத்துள்ள அனைவரையும் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்கிறேன். அதனால் அவர்களை அவையை விட்டு வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு உத்தரவிடுகிறேன் என்றார். இதையடுத்து அவை காவலர்கள் உள்ளே வந்தனர். பதாகையை தூக்கி பிடித்தபடி நின்ற 15 அதிமுக எம்எல்ஏக்களுடன், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கோஷம் எழுப்பியபடியே வெளியே சென்றனர்.
அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
எதிர்க்கட்சியை சார்ந்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு பிரச்னையை எழுப்பியதற்கு அவை முன்னவர் விளக்கம் தந்து சபாநாயகர் ஒரு முடிவு எடுத்து அதில் பூர்த்தி அடையாமல் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். கையிலே ‘அந்த தியாகி யார்?’ என்ற பதாகை பிடித்துக் கொண்டிருந்தனர். மறைந்த எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவை அதற்கு பிறகு பொறுப்பேற்ற இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கக் கூடியவர், தான் சிக்கி இருக்கக்கூடிய வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக யாருடைய காலிலே விழுந்தார்களோ, விழுந்த நேரத்திலே நொந்து போய் நூடுல்ஸ் ஆக மாறி இருக்கக்கூடிய தொண்டர்கள் தான் தியாகிகளாக இருக்கிறார்கள். முதலமைச்சர் பதவி வாங்குவதற்காக யாருடைய காலில் விழுந்து அந்த அம்மையாரை ஏமாற்றினார்களோ அவர்தான் இன்றைக்கு தியாகியாக இருக்கிறார். பதாகையில் இருந்த தியாகி என்ற வார்த்தைக்காக நான் கூறினேன் என்பதை அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
15 எம்எல்ஏக்கள் யார், யார்?
சட்டப்பேரவையில் பதாகைகளை ஏந்தி நேற்று ஒரு நாள் சஸ்பெண்ட் ஆன 15 அதிமுக எம்எல்ஏக்கள் விவரம்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார், வி.பி.கந்தசாமி, அம்மன் கே.அர்ஜுனன், பொன் ஜெயசீலன், இசக்கி சுப்பையா, கோ.செந்தில்குமார், மா.செந்தில்குமார், செந்தில்நாதன், ஜெயசங்கரன் சுந்தர்ராஜன், இ.பாலசுப்ரமணியன், நல்லதம்பி கெங்கவல்லி, மரகதம் குமாரவேல், சுந்தர்ராஜன், சித்ரா ஆகிய 15 எம்எல்ஏக்கள் நேற்று அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
The post பதாகையுடன் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் 15 பேர் ஒருநாள் சஸ்பெண்ட்; முதல்வர் பதவி வாங்க காலில் விழுந்து யாரை ஏமாற்றினாரோ அவர்தான் இன்றைக்கு தியாகி: எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி appeared first on Dinakaran.