இதன் மூலமாக இந்த ஏரியின் கீழ்புறமாக அமைந்துள்ள அருங்குணம், காவாதூர், தேவாதூர், முள்ளி, வளர்பிறை, முன்னூத்திகுப்பம், முருக்கஞ்சேரி, கத்திரிசேரி,தோட்டநாவல், இருசாமநல்லூர், கே.கே.புதூர், குன்னத்தூர், வீராணகுண்ணம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 4000 ஏக்கர் நிலம் இந்த ஏரியின் ஐந்து மதகுகள் வழியாக நேரடி பாசனம் பெறுகிறது. இது மட்டுமின்றி, இந்த ஏரியின் இரண்டு உயர்மட்ட கால்வாய்கள் வழியாக 30 சிறு சிறு ஏரிகளுக்கும் நீர் சென்று அந்த ஏரிகள் மூலம் சுமார் 3000 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. இந்த நிலங்களில் இப்பகுதிக்கே உரித்தான நெல், கரும்பு, வேர்க்கடலை அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் எள், உளுந்து, காராமணி, பச்சை பயறு போன்ற சிறுதானியங்களும் பயிர் செய்யப்படுகின்றன.
அது மட்டுமின்றி இந்த ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் அமைக்கப்படும் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் போன்றவற்றில் நீர் ஆதாரம் எப்போதும் நிறைந்து காணப்படும். இந்த அளவுக்கு நன்மை பயக்கும் இந்த ஏரி கடந்த 50 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள இந்த ஏரியை தூர்வாரி புனரமைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதனை தொடர்ந்து, தமிழக அரசு இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க ரூபாய் 122 கோடி ஒதுக்கீடு செய்து கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் பணிகள் தொடங்கின. இந்த பணிகளானது 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் நிறைவு பெற வேண்டும் என அரசுக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணிகள் முடிவடையாத காரணத்தினால் மேலும் அரசு சார்பில் ரூபாய் 50 கோடி ஒதுக்கப்பட்டு மொத்தத்தில் ரூபாய் 172 கோடி மதிப்பீட்டில் பணிகளை முடிக்க மேலும் 6 மாதங்கள் கால நீட்டிப்பு செய்து 2024 டிசம்பருக்குள் பணிகள் முடிவடைய வேண்டுமென அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த காலகட்டத்திலும் பணிகள் முடிவடையவில்லை. தற்போது வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக சுமார் 7000 ஏக்கர் விலை நிலங்களின் உரிமையாளர்கள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிப்படைந்து வரும் வேளையில் இந்த பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
இதுகுறித்து மதுராந்தகம் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் தூர்வாரப்பட வேண்டிய 250 ஏக்கர் தூர்வாரப்பட்டுவிட்டது. அதேபோன்று ஏரி நீர் படிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் இருக்க 9 அடி உயரத்திற்கு மண் கொட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மோச்சேரி, பில்லாஞ்சிகுப்பம், அனுமந்தகுப்பம், பசும்பூர், புதுப்பட்டு, வேடந்தாங்கல், மலைப்பாளையம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 18 கிலோமீட்டர் அளவிற்கு இந்த தடுப்பு ஏற்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
மேலும், இந்த ஏரியில் உள்ள ஐந்து மதகுகளும் சீரமைக்கும் பணிகள் முடிந்து விட்டன. மொத்தத்தில் சிவில் ஒர்க்குகள் பெரும்பகுதி நிறைவு பெற்று விட்டது. தற்போது ஷெட்டர் அமைக்கும் பணி போன்றவைகளை மேற்கொள்ள 2025ம் டிசம்பர் வரை காலக்கெடு இருந்தாலும் இன்னும் மூன்று மாதத்திற்குள் ஷட்டர் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுவிடும். ஷெட்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தாலும் தற்போது ஏரியில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு மதகுகள் வழியாக விவசாய பாசனத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
அதனால் தற்போது விவசாயிகள் ஏராளமானவர்கள் இந்த ஏரி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். ஏற்கனவே, இந்த ஏரியில் நீர் கொள்ளளவு 694 கன அடியாக இருந்த நிலையில் ஷட்டர் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்ற பிறகு இந்த ஏரியில் நீர் கொள்ளளவு 792 கனஅடியாக உயரும். இதனால் விவசாயிகளுக்கு கூடுதலான தண்ணீர் கிடைக்கும் என தெரிவித்த்னர். எப்படி இருப்பினும் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து இந்த ஏரியில் முழுமையாக நீர் தேக்கி வைக்க அரசும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
The post மதுராந்தகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மந்தகதியில் ஏரி புனரமைப்பு பணிகள்: விவசாயிகள் வேதனை; விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.