இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை டெல்லி வரும்படி அமித்ஷா அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். அப்போது, அவர் கூட்டணிக்கு கண்டிப்பாக வரவேண்டும், அதிமுக முன்னாள் நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா நிபந்தனை விதித்ததாக கூறப்பட்டது. அப்போது அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.
இதனால், அண்ணாமலை மாற்றப்படுவார் என்றும் கூறப்பட்டது. அதற்கு ஏற்றார்போல, தமிழக பாஜ தலைவர் ரேசில் நான் இல்லை என்று அண்ணாமலை அறிவித்தார். அதற்கு ஏற்றார்போல ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை சென்னை வந்தார். பின்னர் நேற்று முன்தினம் நட்சத்திர ஓட்டலில் 16 மாவட்ட தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அண்ணாமலை அழைக்கப்படவில்லை. கூட்டத்தில் மாநில தலைவராக யாரை நியமிக்கலாம் என்று ஆலோசனை கேட்டுள்ளார். பின்னர் நேற்று நிர்மலா சீதாராமன் டெல்லி சென்றார். அங்கு அமித்ஷாவிடம் தனது அறிக்கையை அளித்தார். இதனால் ஓரிரு நாளில் தமிழகம் உள்பட 16 மாநிலங்களுக்கு மாநில தலைவர் பதவியை அறிவிக்க மேலிடம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், மாநில தலைவர் பதவிக்கான ரேசில் முதலிடத்தில் உள்ள நயினார் நாகேந்திரன் நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலையில் அவர் மோடி, அமித்ஷா மற்றும் தேசிய தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார். மாநில தலைவர் நியமிக்கப்பட உள்ள நிலையில் நயினார் டெல்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் நடந்த ஒன்றிய அரசின் நிகழ்ச்சியில் நயினார் மட்டும் மேடையில் ஏற்றப்பட்டார். அவருக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது பாஜவினரால் புதிய அர்த்தத்தோடு பார்க்கப்பட்டது. மேலும் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் மோடியை வரவேற்றார். மோடியுடன் மதுரை ஹெலிகாப்டரில் செல்ல விருப்பம் தெரிவித்தார். ஆனால், பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை ஏமாற்றத்துடன் காரில் சென்ைன திரும்பி விட்டார்.
பன்னீர் சந்திப்பு ரத்து
மதுரை வந்த மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், ஜி.கே.வாசன் ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டதால், கூட்டணியில் பிரச்னை வேண்டாம் என்று அவரது எதிர்பாளர்களான ஓ.பன்னீர் உள்ளிட்டவர்களை பார்க்க மோடி மறுத்து விட்டார். இதனால் அவர்களது சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post பாஜ மேலிடம் அழைப்பு; டெல்லி விரைந்தார் நயினார் நாகேந்திரன்: ஓரிரு நாளில் மாநில தலைவர் அறிவிப்பு வெளியாகும் appeared first on Dinakaran.