திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வர் சித்திரை விழா அனைத்துத்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசிக்காதது ஏன்? கோயில் நிர்வாகத்திற்கு பக்தர்கள், பொதுமக்கள் கேள்வி

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. இக்கோயில், உலக பிரசித்திப்பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்மந்தர் ஆகிய நான்கு சமயக் குறவர்கள் ஒருங்கே பாடல் பெற்ற ஒரே தலம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில். பொதுவாக உப்பு நீரில் தான் சங்கு பிறக்கும். ஆனால், இங்கு சங்கு தீர்த்த குள நன்னீரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து சங்கு பிறந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் கும்பமேளா போல், இங்கும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் ‘புஷ்கரமேளா’ நடந்து வருகிறது.

இப்படி, பல்வேறு புகழ் பெற்ற இத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 11 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம், விழாவின், அதன்படி இந்தாண்டு சித்திரை திருவிழா வரும் மே1ம்தேதி துவங்கி 11ம்தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் 3ம் நாள் 63 நாயன்மார்கள் உற்சவமும், 7ம் நாள் திருவிழாவான பஞ்சமூத்திகள் (பெரிய தேர்) வீதிஉலா உள்ளிட்ட திருவிழாக்களில் திருக்கழுக்குன்றம் மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

வெளியூர்களிலிருந்து வருகின்ற பக்தர்களின் அடிப்படை வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை வசதி, தூய்மைப் பணி ஆகியவைகளை மேற்கொள்வது, மின்சார துறை சார்பில் பெரிய தேரோடும் வீதிகளில் உள்ள மின் வயர்களை மாற்றியமைப்பது உள்ளிட்ட பணிகள், சுகாதார துறை சார்பில் பக்தர்களுக்கு முதலுதவி மற்றும் அவசர மருத்துவ உதவி, காவல் துறை சார்பில் வருகின்ற பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, குற்ற செயல்களை தடுப்பது, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, போக்குவரத்தை சீர் செய்வது.

மேலும், தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைப்பது, வருவாய் துறை சார்பில் அனைத்து துறை பணிகளை நிர்வகிப்பது, கண்காணிப்பது, போக்குவரத்து துறை சார்பில் பக்தர்கள் வெளியூர்களிலிருந்து சிரமமின்றி வந்து செல்ல கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்துவது என்பது போன்ற பல்வேறு துறைகளின் பங்களிப்போடு நடைபெற வேண்டிய சித்திரை திருவிழா தொடர்பாக கடந்த 4ம்தேதி கோயில் நிர்வாகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அதில் உபயதாரர்கள் மட்டும் கலந்து கொண்டனர். ஆனால், பேரூராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை காவல்துறை, தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை, மின்சார துறை உள்ளிட்ட எந்த துறையும் அழைக்காமல் திருவிழா ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவில் அனைத்து துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பணிகள் தேவைப்படும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து ஆலோசிக்காமல் விட்டது ஏன் என்று பக்தர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.மேலும், திருவிழாவை எவ்வித குறைபாடுமில்லாமல் சிறப்பாக நடத்திட உடனடியாக சம்மந்தப்பட்ட துறை சார்ந்தவர்களை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வர் சித்திரை விழா அனைத்துத்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசிக்காதது ஏன்? கோயில் நிர்வாகத்திற்கு பக்தர்கள், பொதுமக்கள் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: