தேன்கனிக்கோட்டை தாலுகாவில் யானைகள்- மனித மோதல்களை தடுக்க ரூ.3.50 கோடி செலவில் கம்பி வட வேலி

*4.5 கி.மீ., தூரத்திற்கு பணி தீவிரம்

தினகரன் செய்தி எதிரொலி

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை தாலுகாவில் யானைகள்- மனித மோதல்களை தடுக்க ரூ.3.50 கோடி மதிப்பில் 4.5 கி.மீ., தூரத்திற்கு கம்பி வட வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,501 சதுர கி.மீ., பரப்பளவுள்ள ஓசூர் வனக்கோட்டத்தில் 1,190 சதுர கி.மீ., காவிரி வடக்கு மற்றும் தெற்கு வன உயிரின சரணாலயங்கள் அமைந்துள்ளன. இங்கு, 468 வகையான தாவரங்கள், 36 வகையான பாலூட்டிகள், 272 வகையான பறவை இனங்கள், 172 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன.

அத்துடன் தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி, உசில், ஆச்சான் மற்றும் பொருசு மர வகைகளும், யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், மான்கள், கடமான், கரடிகள், மயில்கள், எறும்புத்திண்ணிகள் மற்றும் அரியவகை விலங்குகளான சாம்பல் நிற அணில்கள், எகிப்திய கழுகுகளும் உள்ளன.

ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு-தெற்கு வன உயிரின சரணாலயங்களில் யானைகளும் அதிகளவில் உள்ளன. குறிப்பாக ஊடேதுர்க்கம், சானமாவு, நொகனூர், அய்யூர், ஜவளகிரி, பனை, உளிபண்டா, மகாராஜகடை, வேப்பனஹள்ளி, உடுபுராணி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, உரிகம், தக்கட்டி, கெஸ்தூர், மல்லஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான யானைகள் தற்போது முகாமிட்டுள்ளன.

இந்த யானைகள் உணவு, தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளை பொருட்களை துவம்சம் செய்வது வாடிக்கையாக உள்ளது. அத்துடன் யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவமும் நடக்கிறது. இவ்வாறான யானைகள்- மனித மோதல்களை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதனிடையே வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் யானைகள் வராமல் தடுக்கும் வகையில், இரும்பு கம்பி வேலி அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்த செய்தி கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி “தினகரன்” நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் யானைகள் கிராமங்களுக்குள் வராமல் தடுக்க ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் 4.5 கி.மீ தூரத்திற்கு இரும்பு கம்பி வேலி அமைக்கப்படுகிறது.

முதன்மை வன பாதுகாவலர் மற்றும் முதன்மை வன விலங்கு பாதுகாப்பாளர் ஆகியோரது பரிந்துரையை ஏற்று தமிழக அரசு இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், நிதித்துறை மூலமாக ₹1 கோடியே 90 லட்சம், மாவட்ட கனிம அறக்கட்டளை மூலமாக ₹1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த நிதியினை கொண்டு இரும்பு கம்பி வேலி அமைத்து, யானைகள்- மனித மோதல்களை தடுப்பதுடன், விவசாய விளை பொருட்களை பாதுகாத்திட வனத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் அரசுக்கு வைத்த கருத்துருக்களின் அடிப்படையில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் வனப்பகுதியையொட்டி 4.5 கி.மீ., தூரத்திற்கு இரும்பு கம்பி வேலி அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவது தடுக்கப்படும். மேலும், யானைகளிடம் இருந்து பயிர்கள் பாதுகாக்கப்படுவதுடன், உயிர் சேதம் தவிர்க்கப்படும் என்றனர்.

The post தேன்கனிக்கோட்டை தாலுகாவில் யானைகள்- மனித மோதல்களை தடுக்க ரூ.3.50 கோடி செலவில் கம்பி வட வேலி appeared first on Dinakaran.

Related Stories: