1800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கண்ணகி கோயிலில் மாதந்தோறும் பக்தர்கள் வழிபட நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது கம்பம் தொகுதி நா.ராமகிருஷ்ணன் (திமுக) பேசுகையில், ‘‘வண்ணாத்திப் பாறை மேல் சிதிலமடைந்துள்ள கண்ணகி திருக்கோயிலுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த அரசு ஆவன செய்யுமா?’’ என்று கேட்டார். இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது: 1800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மங்கலதேவி கண்ணகி திருக்கோயில் முழுவதுமாக சிதலமடைந்து நிலையில் இருக்கின்றது.

இந்த திருக்கோயிலுக்கு செல்வதற்கு 3 வழிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வழி முழுவதும் வனத்துறை பாதுகாப்பில் இருக்கின்றது.  மங்கலதேவி டிரஸ்ட் என்ற அமைப்பு, கேரளா அரசாங்கத்தின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற இந்த திருக்கோயிலை திருச்சி மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றம் அதை நீங்கள் கேரளா நீதிமன்றத்திலேயே தீர்வு காண வேண்டும் என்று அந்த வழக்கை திருப்பி இருக்கின்றார்கள். அந்த வழக்கு நிலுவையில் இருக்கின்றது.

இது சம்பந்தமாக 19.1.2025 அன்று சென்னைக்கு வந்திருந்த கேரள முதல்வர் பினராய் விஜயனை நானும், துறையின் செயலாளராக இருந்த சந்திரமோகனும் சந்தித்து அவரிடம் கோரிக்கைகளை முன் வைத்தோம். அந்த திருக்கோயில் ஆண்டுக்கு ஒருமுறை சித்ரா பௌர்ணமிக்கு தான் திறக்கப்படுகின்றது. அதை மாதந்தோறும் பௌர்ணமிக்கு திறக்க வேண்டும், திருக்கோயிலை தமிழக அரசே முழுவதுமாக புனரமைப்பதற்கு அனுமதிக்க வேண்டும்,

வனத்துறையோடு இணைந்து அந்த திருக்கோயிலை புனரமைக்கின்ற பணிகளை ஆய்வு செய்ய வேண்டும், தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்கின்ற ஐயப்ப பக்தர்களுக்காக சபரிமலையில் 5 ஏக்கர் நிலம் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்தோம். இது குறித்து விரைவில் ஒரு கலந்தாய்வு கூட்டத்றிற்கு ஏற்பாடு செய்வதாக கேரள முதல்வர் உறுதி அளித்து இருக்கின்றார். ஆகவே கண்ணகி கோயிலை மேம்படுத்தவும், மாதந்தோறும் பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு உண்டான வழி காணவும் முதல்வரின் ஆலோசனைகளை பெற்று தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post 1800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கண்ணகி கோயிலில் மாதந்தோறும் பக்தர்கள் வழிபட நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: