எஸ்ஐ தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கு: தேர்வாணைய உறுப்பினர் – செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: எஸ்ஐ தேர்வுக்கான அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தேர்வாணைய உறுப்பினர் – செயலர் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பிரதீப், திலகராஜன், வேல்முருகன், மோகன்ராஜ் உள்ளிட்டோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில் காலியாகவுள்ள 1,299 உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்.4ல் வெளியானது. இதற்கு ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க இயலும். கடந்தாண்டு ஜூன் மாதம் உதவி ஆய்வாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. பின்னர் நிர்வாக காரணங்களுக்காக தேர்வு நடத்தப்படவில்லை. அதன்பிறகு, எவ்விதமான தேர்வு அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் வயதுத்தளர்வு வழங்கினால் மட்டுமே தேர்வுக்கு தயாராகி வரும் பலரால் பயன்பெற இயலும். இல்லையெனில் பலர் தேர்வு எழுதும் வாய்ப்பை இழப்பர்.

தற்போதைய அறிவிப்பில், திறந்தநிலை பொதுப்பிரிவில் வரும் விண்ணப்பதாரர்களுக்கு எவ்விதமான வயது தளர்வும் வழங்கப்படவில்லை. இதனால், எங்களைப் போன்ற பலர் வாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்காக ஏப்.4ல் வெளியிட்ட அறிவிப்பினை சட்டவிரோதமானதாக அறிவித்து அதை ரத்து செய்து, திறந்த நிலை பிரிவில் வயது தளர்வு வழங்கி புதிய அறிவிப்பினை வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், மனுக்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்-செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப். 22க்கு தள்ளி வைத்தார்.

The post எஸ்ஐ தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கு: தேர்வாணைய உறுப்பினர் – செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: