கல்வி உரிமை தொடர்பாக வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு முதல்வருக்கு நன்றி தெரிவித்து இரவு முழுவதும் எனக்கு வந்த அழைப்புகள்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பதில் அளிப்பதற்கு முன்பாக அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழ்நாட்டில் இருக்கிற தனியார் கல்லூரிகளினுடைய தாளாளர்கள், அதேபோன்று, சுயநிதி கல்லூரிகளின் கூட்டமைப்பில் இருக்கிற மாநில நிர்வாகிகள், அதை தொடர்ந்து கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருக்கிற பேராசிரியர்கள், முன்னாள் துணை வேந்தர்கள், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்றையதினம் இரவு முழுவதும் என்னிடத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டினுடைய முதல்வருக்கு எங்கள் சார்பாக நீங்கள் நன்றி சொல்லுங்கள் என்று தொடர்ந்து எனக்கு போன் மூலமாக செய்திகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றத்திலிருந்து தமிழ்நாட்டினுடைய முதல்வர் பெற்றிருக்கிறார். அதற்காக எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டார்கள். குறிப்பாக, நேற்றையதினம் இரவு 9 மணிக்கு, ஒரு பேராசிரியர்-அவர் அரசியல் அறிவியல் படித்த ஒரு பேராசிரியர் சொன்னார், “ஒன்றிய அரசு கொடுக்க தவறியதை, கொடுக்க மறுத்ததை, அந்தக் கல்வி உரிமையை உச்ச நீதிமன்றம் வரை சென்று, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை, மாநில உரிமைக்கு வித்திட்ட ஒரு தீர்ப்பை வாங்கித் தந்திருக்கிறார்.

எனவே, எங்கள் அத்தனை பேர்களின் சார்பாக பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், ஏன் தமிழ் மக்களின் சார்பாக கோடானு கோடி நன்றியை முதல்வருக்கு தெரிவித்துக்கொள்கிறோம்” என்று சொன்னார்கள். எனவே, அவர்களின் சார்பாக முதல்வருக்கு, மாநில உரிமைக்கு வித்திட்டவருக்கு, நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post கல்வி உரிமை தொடர்பாக வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு முதல்வருக்கு நன்றி தெரிவித்து இரவு முழுவதும் எனக்கு வந்த அழைப்புகள்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: