17வது லீக் போட்டியில் சொந்த மண்ணில் சென்னை தோல்வி காணாத டெல்லி

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் அரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில் சென்னை-டெல்லி அணிகள் களம் காணுகின்றன. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள ருதுராஜ் தலைமையிலான சென்னை அணிக்கு இது 4வது ஆட்டம். ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை 2வது வெற்றிக்காக சொந்த களத்தில் இன்று டெல்லியை எதிர்கொள்கிறது. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி, இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஹாட்ரிக் வெற்றிக்காக இன்று 3வது ஆட்டத்தில் சென்னையை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.

அவற்றில் சென்னை 19 ஆட்டங்களிலும், டெல்லி 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக சென்னை 223, டெல்லி 198 ரன் விளாசின. குறைந்தபட்சமாக சென்னை 110, டெல்லி 83 ரன் எடுத்துள்ளன. இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் சென்னை 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த அணிகள் மற்ற அணிகளுக்கு எதிராக கடைசியாக மோதிய தலா 5 ஆட்டங்களில் சென்னை 2-3 என்ற கணக்கிலும், டெல்லி 4-1 என்ற கணக்கிலும் வெற்றி, தோல்விகளை பெற்றுள்ளன.

சேப்பாக்கம் சிதம்பரம் அரங்கில் இந்த 2 அணிகளும் மோதிய 9 ஆட்டங்களில் சென்னை 7-2 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டெல்லி அணியில் உள்ள தமிழ்நாடு வேகம், நடராஜனுக்கு கடந்த ஆட்டங்களில் கிடைக்காத வாய்ப்பு, இன்று சொந்த ஊரில் கிடைக்கலாம். சென்னை அணியிலும் தமிழ்நாடு வீரர் ஆந்த்ரே சித்தார்த் இன்று ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் அதிசயம் நிகழலாம்.

 

The post 17வது லீக் போட்டியில் சொந்த மண்ணில் சென்னை தோல்வி காணாத டெல்லி appeared first on Dinakaran.

Related Stories: