ஐபிஎல் சீசனில் நாடு முழுவதும் வெறிச்சோடிப்போகும் தியேட்டர்கள்

சென்னை: ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன்களில் சினிமா தியேட்டர்கள் வெறிச்சோடிப்போகும் நிலை நாடு முழுவதும் காணப்படுகிறது. இதனால் திரையுலகினர் கலக்கம் அடைந்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் மார்ச் இறுதியிலிருந்து மே வரை நடைபெறுகிறது. இந்த இரண்டு மாதங்கள் தியேட்டர்களுக்கு வரும் படங்கள் ஐபிஎல் ஆட்டங்களால் ஆட்டம் காண்கின்றன. இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. மே 29ம் ேததி போட்டிகள் முடிந்தது. இந்த இரண்டு மாதங்களில் தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் 2, விடுதலை, யாத்திசை, சொப்பன சுந்தரி, ஆகஸ்ட் 16, 1947, தமிழரசன், யானைமுகத்தான், தெய்வமச்சான், ஃபர்ஹானா, குட்நைட், இராவணக் கோட்டம், பிச்சைக்காரன் 2, யாதும் ஊரே யாவரும் கேளீர், தீராக் காதல், காசேதான் கடவுளடா, ரேசர், எவன், யோசி, முந்திரிக்காடு, இது கதையல்ல நிஜம், ரிப்பாப்பரி, மாவீரன் பிள்ளை உள்ளிட்ட படங்கள் திரைக்கு வந்தன.

இதில் பொன்னியின் செல்வன் 2 படம் மட்டுமே வினியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்தது. ஆனால், அதுவும் வெறும் ரூ.200 கோடிக்குள் (உலகம் முழுவதும்) வசூலித்து சுருண்டது. அதே சமயம் பொன்னியின் ெசல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பரில் திரைக்கு வந்ததால், ரூ.550 கோடியை (உலகம் முழுவதும்) வசூலித்து சாதனை படைத்தது. ஆனால் இந்த முறை அந்த படம் ஐபிஎல் சீசனில் வெளியானதே, வசூல் குறைவதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதற்கு மற்றொரு உதாரணமும் சொல்லப்படுகிறது. அதாவது அதிக அளவில் வசூலித்த பாகுபலி, கேஜிஎப் படங்களின் வசூலை விட அதன் இரண்டாம் பாகங்களான பாகுபலி 2, கேஜிஎப் 2 படங்கள்தான் அசூர வசூல் சாதனை புரிந்தன. அதேபோல்தான் பொன்னியின் செல்வன் 2வும் வசூலித்திருக்க வேண்டும். ஆனால் ஐபிஎல் காலகட்டத்தில் வெளியானதால், பொன்னியின் செல்வன் 2 அடிவாங்கிவிட்டது என்கிறார்கள் திரைப்பட வினியோகஸ்தர்கள்.

இதே நிலைதான் இந்திய சினிமாவின் தகப்பன் என அழைக்கப்படும் பாலிவுட்டுக்கும். பாலிவுட்டில் கடந்த 2 மாதங்களில் சல்மான் கான் நடித்த கிஸி கா பாய், கிஸி கி ஜான், அஜய் தேவ்கன் நடித்த போலா (கைதி படத்தின் ரீமேக்) உள்பட 12 படங்கள் ரிலீசாகின. இதில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான், அஜய் தேவ்கனின் படங்களே படு தோல்வி அடைந்துவிட்டன. இதற்கு எல்லாம் காரணம், ஐபிஎல் கிரிக்கெட்தான். மக்களிடம், உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு நிகரான மோகம், ஐபிஎல் மேட்ச்களின் மீது இருக்கிறது. அந்த சமயத்தில் அவர்கள் டிவிக்கு முன்பும், செல்போனுக்கு முன்பும் அமர்ந்து ஐபிஎல் பார்ப்பதிலேயே நேரத்தை செலவிடுகிறார்கள். தியேட்டர்களுக்கு பகல் நேரங்களில் கோடை சமயத்தில் செல்ல மாட்டார்கள். மாலை நேரத்தில்தான் தியேட்டர்களுக்கு கூட்டம் வரும். இந்நிலையில் கோடை காலத்தில் ஐபிஎல் ஆட்டங்கள் மாலையில்தான் நடக்கிறது.

எனவே, தியேட்டர்களுக்கு செல்வதற்கு பதிலாக படங்களை பார்க்கவே மக்கள் நேரத்தை செலவிடுகிறார்கள். இந்திய சினிமாவின் மாபெரும் பிசினஸ் ஹப்- ஆன டோலிவுட்டிலும் இதே நிலைதான். சமந்தா நடிப்பில் ரூ.60 கோடி செலவில் உருவான சாகுந்தலம், அகில் நடிப்பில் ரூ.100 கோடி செலவில் உருவான ஏஜென்ட், நாக சைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி உள்ளிட்ட படங்கள் கடந்த ஏப்ரல், மே மாதம் திரைக்கு வந்தன. ஐபிஎல் ஜுரத்தில் இந்த படங்கள் பந்தாடப்பட்டன. சாகுந்தலம் படம் வெறும் 8 கோடி ரூபாய் மட்டும்தான் சம்பாதித்தது.

ஏஜென்ட் படம் ரூ.100 கோடியை செலவிட்டு, ரூ.5 கோடி கூட சம்பாதிக்கவில்லை. கஸ்டடி படம், பான் இந்தியா அளவில் அனைத்து மொழிகளிலும் வெளியாகி தோல்வி படமாக மாறியது.  இதே கதிதான் மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி, போஜ்புரி உள்ளிட்ட மொழி படங்களுக்கும். இதனால் இந்திய திரையுலகமே ஸ்தம்பித்துவிடும் போன்ற தோற்றம் ஐபிஎல் சீசன்களில் உருவாகிவிடுகிறது. இதன் காரணமாக, ஐபிஎல் சீசனில் இனி பெரிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டாம் என மறைமுகமாக சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

The post ஐபிஎல் சீசனில் நாடு முழுவதும் வெறிச்சோடிப்போகும் தியேட்டர்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: