காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 4.13 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு

காஞ்சிபுரம், ஜன.7: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 4,13,182 அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாகவும், இதற்கான டோக்கன்கள் தீவிரமாக விநியோகம் செய்யப்படுவதாகவும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தைப் பொங்கலுக்கு அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்புடன் கூடிய ரூ.3,000 ரொக்கம் ஆகியவை நாளை முதல் (8ம் தேதி) வழங்க அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 696 அரிசி பெறும் நியாய விலைக்கடைகளில் 4,13,182 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது. முதல் நாளான நாளை முற்பகலில் 100 மற்றும் பிற்பகலில் 100 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு பொருட்கள் பெறும் வகையிலும், தொடர்ந்து வரும் நாட்களில் முற்பகலில் 150 மற்றும் பிற்பகலில் 150 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் வகையில் தெரு வாரியாக பிரித்து, விற்பனையாளர்கள் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தேவையான அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் ஆகியவை அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நியாயவிலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி நியாயவிலைக் கடைகளில் நெரிசல் ஏற்படாத வகையில், அவரவர்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தினங்களில் சென்று பொங்கல் பரிசு பொருட்களை பெற்று, பொங்கல் பண்டிகையை கொண்டாடலாம் என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

Related Stories: