மாமல்லபுரம், ஜன.7: சுற்றுலா வழிகாட்டிகளுக்கு 3 நாட்கள் நடைபெறும் சுற்றுலா வழிகாட்டி திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு மாமல்லபுரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதியில் நேற்று தொடங்கியது. பயிற்சிக்கு, மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக இயக்குனர் மற்றும் பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோசப் வேளாங்கண்ணி, ஓட்டல் மேலாண்மை மையத்தின் பொறுப்பாளர் சிவபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினர்களாக மாநில அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு நிபுணர் குழு ஆணைய தலைவர் பழனிக்குமார், தமிழ்நாடு சுற்றுலாத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தனர்.
இதில் மாமல்லபுரம், பாண்டிச்சேரி, காஞ்சிபுரம், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர். மதுரை காமராஜர் பல்கலைகழகம் சார்பில், சுற்றுலா வழிகாட்டிகள் கூடுதல் தகவல்களை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும், சுற்றுலாப் பயணிகளை எப்படி அணுகுவது, எப்படி பணிவுடன் பேச வேண்டும், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் சரியான தகவல்களை கூற வேண்டும், பயணிகள் தங்கியுள்ள ஓட்டல் அறைகளுக்கு எப்படி பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும், தவற விட்ட பொருட்களை எப்படி அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், குறிப்பாக வரலாற்று தகவல்களை துல்லியமாக எப்படி எடுத்து கூற வேண்டும் என்பது குறித்து தெளிவாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தனர். மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு பொய்யான தகவல்களை கூறாமல், உண்மையான வரலாற்று தகவல்களை சொல்ல வேண்டும் எனவும், சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும் எனவும் அறிவுரையும் வழங்கப்பட்டது. அப்போது, சுற்றுலா வழிகாட்டிகள் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
