சென்னை, ஜன.3: சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து பொதுமக்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நம்பகமான, பாதுகாப்பான போக்குவரத்து வசதியை தொடர்ந்து செய்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2025ம் ஆண்டில் மட்டும் 11.19 கோடி பேர் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளார்கள். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘கடந்த ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2018 வரை 2,80,52,357 பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதேபோல், 2019ம் ஆண்டில் 3,28,13,628 பயணிகளும், 2020ம் ஆண்டில் 1,18,56,982 பயணிகளும், 2021ம் ஆண்டில் 2,53,03,383 பயணிகளும், 2022ம் ஆண்டில் 6,09,87,765 பயணிகளும், 2023ம் ஆண்டில் 9,11,02,957 பயணிகளும், 2024ம் ஆண்டில் 10,52,43,721 பயணிகளும், 2025ம் ஆண்டில் 11,19,80,687 பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். குறிப்பாக, கடந்த ஜூன் 29 முதல் டிசம்பர் 31 வரை மொத்தம் 46,73,41,480 பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டிஜிட்டல் எஸ்விபி, க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு, வாட்ஸ்அப், பே-டிஎம் செயலி, போன்-பே மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுன்டர்களில் வாங்கப்படும் ஒற்றை பயணத்துக்கான காகித க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு இந்த தள்ளுபடி கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
