பூரன், மார்ஷ் அதிரடி அரைசதம் லக்னோவுக்கு முதல் வெற்றி

ஐதராபாத்: ஐபிஎல் டி20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் அதிரடி அரைசதம் அடிக்க லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் 3வது ஓவரில் ஷர்துல் தாக்கூரின் துல்லிய பந்துவீச்சில் அபிஷேக் சர்மா (6 ரன்), இஷான்கிஷன் (0) அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 47 ரன் (28) எடுத்த நிலையில், போல்டானார். அடுத்து வந்த கிளாஸன் (26 ரன்) துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். நிதீஷ்குமார் ரெட்டி 32 ரன்னிலும் (28 பந்து), கேப்டன் கம்மின்ஸ் 18 ரன்னிலும் (4 பந்து) ஆட்டமிழந்தனர். இளம் வீரர் அனிகேத் வர்மா, 13 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் விளாசியதன் மூலம் சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன் எடுத்தது. லக்னோ அணியில் ஷர்துல் தாக்கூர் 34 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட் கைப்பற்றினார்.

191 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர் மார்க்கரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ், பூரன் ஜோடி அதிரடியாக ஆடியது. பூரன் 18 பந்திலும், மார்ஷ் 29 பந்திலும் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 43 பந்தில் 116 ரன் விளாசியது.

பூரன் 70 ரன்னிலும் (26 பந்து, 6 சிக்ஸ், 6 பவுண்டரி), மார்ஷ் 52 ரன்னிலும் (31 பந்து) கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் (15), பதோனி (6) விரைவில் ஆட்டமிழந்த போதிலும், அடுத்து வந்த சமத் (22 ரன்*, 8 பந்து), மில்லர் (13 ரன், 7 பந்து) அதிரடி காட்ட லக்னோ 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முந்தைய போட்டியில் டெல்லியிடம் தோற்ற லக்னோ தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

The post பூரன், மார்ஷ் அதிரடி அரைசதம் லக்னோவுக்கு முதல் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: