சேப்பாக்கத்தில் இன்று மல்லுக்கட்டு சென்னை-பெங்களூர் மோதல்

சென்னை: ஐபிஎல் போட்டியின் 8வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் களம் காண உள்ளன. சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் அரங்கில் நடைபெறும் இந்தப்போட்டியில் மோதும் 2 அணிகளும் முதல் ஆட்டத்தில் வென்ற உற்சாகத்துடன் களம் காணுகின்றன. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை முதல் ஆட்டத்தில் மும்பை அணியையும், ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூர் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவையும் சாய்த்துள்ளன.

சொந்த களம், உள்ளூர் ரசிகர்கள் சென்னைக்கு கூடுதல் பலம். அத்துடன் அஸ்வின், ஜடேஜா, கலீல் அகமது, நூர் அகமது ஆகியோர் கன கச்சிதமாக பந்து வீசுகின்றனர். ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் ஆகியோரும் பொறுப்புணர்ந்து விளையாடுகின்றனர். இவர்களுடன் திரிபாதி, துபே, ஹூடா ஆகியோரும் அடிக்க ஆரம்பித்தால் பெங்களூருக்கு சிக்கல்தான். அதே நேரத்தில் பெங்களூர் அணியின் கோஹ்லி, பிலிப் சால்ட், பட்டிதார், படிக்கல், லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா என பேட்டிங் வரிசை சிறப்பாக இருக்கிறது. கூடவே பந்து வீச்சிலும் க்ருணால் பாண்டியா, ஜோஸ் ஹசல்வுட், லிவிங்ஸ்டோன் , யாஷ் தயாள் ஆகியோரும் அசத்துகின்றனர்.

எனவே இன்றைய ஆட்டத்தில் 2வது வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக் கட்டும். இந்த 2 அணிகளிலும் இந்திய அணியை வழி நடத்திய முன்னாள் கேப்டன்களான டோனி, கோஹ்லி கேப்டன்களாக இருந்துள்ளனர். இப்போதும் அணியில் தொடரும் இவர்கள், அணியிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பேருக்கு கெய்க்வாட், பட்டிதார் ஆகியோர் கேப்டன்களாக இருந்தாலும், டோனி, கோஹ்லி தலையசபை்புக்காக இருவரும் காத்திருக்கின்றனர். அதனால் இன்றைய ஆட்டம் டோனி-கோஹ்லிக்கு இடையிலான ஆட்டமாகவே இருக்கும்.

* நேருக்கு நேர்
* இந்த 2 அணிகளும் இதுவரை 33 ஐபிஎல் ஆட்டங்களில் மோதியுள்ளன.
* அவற்றில் சென்னை 21 ஆட்டங்களிலும், பெங்களூர் 11 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.
* ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக சென்னை 226, பெங்களூர் 218 ரன் விளாசியுள்ளன.
* குறைந்தபட்சமாக சென்னை 82, பெங்களூர் 70 ரன் எடுத்துள்ளன.
* இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் சென்னை 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
* சேப்பாக்கம் சிதம்பரம் அரங்கில் இந்த 2 அணிகளும் 9 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதிலும் சென்னை 8-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

The post சேப்பாக்கத்தில் இன்று மல்லுக்கட்டு சென்னை-பெங்களூர் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: