இளையராஜா, சர்வதேச நாடுகளில் சிம்பொனி இசையை வாசித்துக் கொண்டிருப்பதை தமிழக முதல்வர் பாராட்டினார். உலக நாடுகளில் எங்கோ ஒரு மூலையில் தமிழ்நாட்டில் பிறந்த ஒரு இசை மேதை அந்த சிம்பொனியை இசைக்கிறபோது, தமிழ்நாட்டில் அந்த சிம்பொனி இசையை கேட்க முடியாதா என்கிற ஏக்கம் தமிழ் மக்களுக்கு இருக்கிறது. ஆகவே, தமிழ்நாட்டில் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்றுவதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: உறுப்பினர் சிந்தனை செல்வன், இசைஞானி இளையராஜாவை பற்றி பெருமையோடு எடுத்துச் சொல்லி, லண்டனிற்கு சென்று சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தி வந்த பெருமை தமிழகத்திற்கு கிடைக்காதா, தமிழராக இருக்கக்கூடிய நாம் கேட்க முடியாதா என்ற ஏக்கம் இருப்பதாக எடுத்துச் சொன்னார். இளையராஜாவை நான் சந்தித்தபோது, இதே பிரச்னையை அவரிடம் எடுத்துச் சொன்னேன். லண்டனில் இருக்கக்கூடிய 400 பேரையும் இங்கே அழைத்து வருவது என்றால், நினைத்த நேரத்தில் அழைத்து வர முடியாது. காலஅவகாசம் தேவைப்படுகிறது. எனவே, அதையெல்லாம் கருத்தில் கொண்டு, ஜூன் 2ம்தேதி அவருடைய பிறந்த நாள். அதுமட்டுமல்ல, அவர் திரையுலகத்திற்கு வந்து 50 ஆண்டுகாலம் நிறைவடையக்கூடிய அந்த நாளும் அமைகிறது. அதையும் பாராட்டக்கூடிய வகையிலும், சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதை பாராட்டும் விதமாக அன்றை தினம் அவருக்கு பாராட்டு விழாவை தமிழக அரசே நடத்த இருக்கிறது.
The post தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு ஜூன் 2ல் பாராட்டு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.
