மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களுக்கு பாஜ அபராதம் விதிக்கிறது: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு

சென்னை: கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: கடந்த 1976ம் ஆண்டு நாடு குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பியது. அதனை தென்மாநிலங்கள் எல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டின. வட இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்கள் அதில் தோல்வியைத் தழுவின. அதேபோல் தென்மாநிலங்கள் வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைந்தது.

அதிக ஜிடிபி, அதிக தனிநபர் வருமானம், வேலைவாய்ப்புகள் உருவாக்கம், சிறந்த உள்கட்டமைப்பு மேம்பாடு, சிறந்த நிர்வாகம் மற்றும் சிறப்பான சமூக நலன் என அடைந்து கவர்ந்திழுக்கும் தெற்காக மாறியுள்ளது. மக்கள் தொகையை தென்மாநிலங்கள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியற்காக பாஜ அபராதம் விதிக்கிறது. நீங்கள் மக்களவை தொகுதிகளை அதிகரிக்க வேண்டாம். தொகுதி மறுவரையறையை மாநிலங்களுக்குள் மேற்கொள்ளுங்கள். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை தெற்கு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

அப்படி நடந்தால் வடக்கு மாநிலங்கள் நம்மை இரண்டாம் பட்சமாக மாற்றும். விகிதாச்சாரம் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது எங்களை அரசியல் ரீதியாக பாதிக்கும். இல்லையென்றால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொள்கையை பின்பற்றுங்கள். இந்த மறுவரையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளாதீர்கள். தற்போது மக்களவையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 24 சதவீதம். தொகுதி மறுவரையை நடத்தியே தீர்வது என்று ஒன்றிய அரசு விரும்பினால் மொத்தமுள்ள ஐந்து தென்மாநிலங்களுக்கான மக்களவை பிரதிநிதித்துவத்தை 30 சதவீதமாக உயர்த்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

The post மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களுக்கு பாஜ அபராதம் விதிக்கிறது: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: