மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் காட்டு யானை: வனத்திற்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை


ஊட்டி: மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் வலம் வரும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, யானைகள், சிறுத்தை, கரடி, காட்டுமாடுகள் போன்றவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வருவதால், அடிக்கடி மனித-விலங்கு மோதல் ஏற்படுகிறது. குறிப்பாக, காட்டு யானைகள் உணவு தேடி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வருகின்றன. அப்போது சில சமயங்களில், யானைகளால் தாக்கப்பட்டு கூலித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊட்டி மசினகுடி அருகே உள்ள மாவனல்லா, வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் யானை ஒன்று வலம் வருகிறது. இவை மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் சாலைகளில் அடிக்கடி வலம் வருகிறது. அப்போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை விரட்டுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், இரவு நேரங்களில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வாழைத்தோட்டம் மற்றும் மாவனல்லா பகுதியில் உலா வரும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் காட்டு யானை: வனத்திற்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: