காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த கஞ்சா வியாபாரி ஓட, ஓட சரமாரி வெட்டி படுகொலை: 3 பேர் கைது

காரைக்குடி: கஞ்சா வியாபாரியை ஓட, ஓட மர்ம கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, சேர்வார் ஊருணி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (27). இவர் மீது கஞ்சா பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, காரைக்குடி அருகே குன்றக்குடியில் 112 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த வழக்கில், மனோஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த மனோஜ், காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.

நேற்று காலை காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட மனோஜ், நண்பர்கள் 2 பேருடன் 2 டூவீலர்களில் டி.டி நகர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல், 2 டூவீலர்கள் மீதும் மோதியது. இதில், மூவரும் வாகனங்களுடன் கீழே விழுந்தனர். இதையடுத்து மனோஜ் எழுந்து ஓட முயன்றார். உடனே காரில் இருந்து இறங்கிய 4 பேர், மனோஜ் உள்ளிட்ட 3 பேரையும் சரமாரியாக வெட்டினர். கும்பலிடம் இருந்து தப்பித்த மனோஜ், 100 அடி சாலையில் உயிருக்கு பயந்து ஓடினார். ஆனால், கும்பல் விடாமல் துரத்தி அவரை ஓட, ஓட விரட்டி வெட்டியது.

இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 2 நண்பர்களையும் தாக்கிய கும்பல் தப்பி ஓடியது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அலறியடித்து ஓடினர். தகவலறிந்த டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார், மனோஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நண்பர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காரைக்குடியில் இருந்து காரில் தப்பிய குற்றவாளிகள் திருப்பத்தூர் அருகே சிராவயல் பகுதியில் காரை நிறுத்தி விட்டு, அங்கிருந்த காட்டு பகுதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் உத்தரவுப்படி காட்டை சுற்றி 5 கிமீக்கு மேல் போலீசார் குவிக்கப்பட்டனர். டிரோன் கேமரா மூலம் தேடி வந்தனர். தேடுதல் வேட்டையில் சேர்வார் ஊரணி பகுதியை சேர்ந்த குருபாண்டி (23) மற்றும் விக்கி (எ) விக்னேஷ்வரன், சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள சாலையில், கஞ்சா வியாபாரியை ஓட, ஓட வெட்டிக் கொன்ற சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* முக்கிய குற்றவாளி இன்ஜி. பட்டதாரி
மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத் கூறுகையில், ‘‘2 மணி நேர தேடுதல் வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான குருபாண்டி (23) இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். அவர் மீது எந்த வழக்கும் இல்லை. மனோஜ் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவர். கடந்த 2021ல் குருபாண்டியின் தந்தை லட்சுமணன் கொலை செய்யப்பட்டுள்ளார். அது சம்பந்தமாக குருபாண்டி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து பழிக்குப்பழியாக மனோஜை கொலை செய்துள்ளனரா என விசாரித்து வருகிறோம். ஆனால், லட்சுமணன் கொலை வழக்கில் மனோஜ் குற்றவாளி இல்லை. அவர் சம்பந்தப்பட்டுள்ளாரா என விசாரணை மேற்கொள்ளப்படும். சம்பவம் தொடர்பாக கார் மற்றும் 2 வாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’, என்றார்.

* கை, கால் முறிவு
கொலை செய்த பின் காரில் தப்பிய குற்றவாளிகள் திருப்பத்தூர் அருகே சிராவயல் பகுதியில் காரை நிறுத்தி விட்டு, அங்கிருந்த காட்டு பகுதிக்குள் தஞ்சமடைந்தனர். அவர்களை பிடிக்க சென்றபோது, போலீசாரிடமிருந்து குருபாண்டி, சக்திவேல் இருவரும் தப்ப முயன்றனர். அப்போது, இருவரும் தவறி விழுந்ததில் குருபாண்டிக்கு வலது கையில் எலும்பு முறிவும், சக்திவேலுக்கு வலது காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. அதன்பின் போலீசார், இருவரையும் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

The post காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த கஞ்சா வியாபாரி ஓட, ஓட சரமாரி வெட்டி படுகொலை: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: