ஆடு வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ.87 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் கைது

திருவொற்றியூர்: மாதவரம் கில்பன் நகரை சேர்ந்தவர் ஜெகன் (44). இவர், சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் லேப்டாப் மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். வியாசர்பாடியை சேர்ந்த இளவழகி (39), ஓ.என்.ஜி.சி.யில் பணிபுரியும் கேரம் விளையாட்டு பயிற்சியாளர். இவர் விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை பெற்றவர். இவரிடம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், ஜெகனின் மகள் கேரம் விளையாட்டு பயிற்சி பெற்றார். அப்போது மகளை பயிற்சிக்காக அழைத்து சென்றபோது ஜெகனுக்கும், இளவழகிக்கும் தொழில் ரீதியான பழக்கம் ஏற்பட்டது.

அப்போது ஜெகனிடம் தங்களுக்கு தெரிந்த நபரான திருமுல்லைவாயலை சேர்ந்த பால்ராஜ் (37) என்பவர் வெளிமாநிலங்களில் இருந்து ஆடுகளை வாங்கி வந்து சென்னையில் விற்று நல்ல லாபம் சம்பாதித்து வருகிறார். அவரிடம் நாங்கள் ஆடு வியாபாத்தில் முதலீடு செய்து லட்சக்கணக்கில் லாபமடைந்து வருகிறோம். நீங்களும் அவரிடம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிக்கலாம், என இளவழகி கூறியுள்ளார். அதை நம்பிய ஜெகன், இளவழகியுடன் சென்று பால்ராஜை சந்தித்து ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் அடுத்த 10 நாட்களில் முதலீடு செய்த பணத்திற்கு ரூ.80 ஆயிரம் கமிஷனாக ஜெகனுக்கு கொடுத்துள்ளனர்.

அதன் பிறகு மேலும் முதலீடு செய்தால் இன்னும் அதிகமாக கமிஷன் கிடைக்கும் என இளவழகியும், பால்ராஜும் கூறியுள்ளனர். ஏற்கனவே செய்த முதலீடுக்கு கமிஷன் கிடைத்ததால் மகிழ்ச்சியான ஜெகன் மேலும் ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார். இதற்கும் சில தினங்களில் கமிஷன் தொகை கொடுத்துள்ளனர். இப்படியாக தொடர்ந்து சுமார் ஒரு வருடத்திற்குள் ரூ.87 லட்சம் வரை முதலீடு என கூறி ஜெகனிடம் இருந்து பெற்றுள்ளனர். இந்நிலையில் சில மாதம் வரை கமிஷன் தொகையை கொடுத்து வந்த பால்ராஜ், நாளடைவில் பணம் தராமல் ஜெகனை ஏமாற்றி வந்துள்ளார்.

இதனால், முதலீடு பணத்தை திருப்பி கொடுங்கள் என பால்ராஜ் மற்றும் அவரது மனைவி தீபா (36) மற்றும் இளவழகி ஆகியோரிடம் கேட்டுள்ளார். அதற்கு, நீங்கள் கொடுத்த பணம் வியாபாரத்தில் போட்டதில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. எங்களால் பணத்தை திருப்பி கொடுக்க முடியாது, என கூறியுள்ளனர். இதுகுறித்து கடந்த 2024ம் ஆண்டு மாதவரம் காவல் நிலையத்தில் ஜெகன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், பால்ராஜ் அவரது மனைவி தீபா இருவரும் வங்கி அலுவலர்கள் என்பதும், இவர்கள் இளவழகி மற்றும் அவரது கணவர் சக்திவேல் (42) பெங்களூருவை சேர்ந்த பெண் உள்பட 5 பேர் கூட்டு சேர்ந்து, இதுபோல் பலரிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்தது தெரியவந்தது.

அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கை விரைந்து முடிக்க சென்னை மாநகர ஆணையர் அருண் உத்தரவிட்டதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டு தலைமறைவாக இருந்த பால்ராஜ், அவரது மனைவி தீபா, கேரம் பயிற்சியாளர் இளவழகி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார், 3 செல்போன்கள் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலை மறைவாக உள்ள சக்திவேல் மற்றும் பெங்களூருவை சேர்ந்த பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: