இயக்குநரை கொன்றது ஏன்? நடிகை பரபரப்பு வாக்குமூலம்

திருக்கோவிலூர்: குறும்பட இயக்குனரை வெட்டிக் கொலை செய்ததாக துணை நடிகை உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவரை தீர்த்துக் கட்டியது ஏன் என்று நடிகை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த சு.பில்ராம்பட்டு மதுரா வேடாலம் கிராம எல்லைப்பகுதியில் உள்ள ஒரு சவுக்குத் தோப்பில் கடந்த 7ம்தேதி அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இதில் கடந்த 3ம் தேதி இரவு கண்டாச்சிபுரம் பஸ்நிறுத்தம் பகுதியில் இறங்கிய நபர், வழிதெரியாமல் நீண்டநேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. எனவே அவர் தான் கொலை செய்யப்பட்ட நபராக இருக்கலாம் என சந்தேகித்தனர். செல்போன் அழைப்புகள் குறித்தும், பதிவான விவரங்கள் தொடர்பாகவும் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இதில் அந்த நபர் சென்னையில் இருந்து பஸ்சில் புறப்படும்போதும், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இறங்கும்போதும், பின்னர் அங்கிருந்து கண்டாச்சிபுரம் பஸ் நிலையத்தில் இறங்கும்போதும் செல்போன் எண்ணுக்கு ஒரே நபர் பலமுறை பேசியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

விசாரணையில், அந்த நபருடன் செல்போனில் பேசியது சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த சினிமா துணை நடிகையான பதம் மகள் பூஜா (21) என்பது தெரிய வந்தது. உடனே சென்னை முகப்பேர் பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், பூஜாவை மடக்கிப்பிடித்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட நபர், திருநெல்வேலி மாவட்டம் கருங்குளம் அருகே நம்பைகுறிச்சியை சேர்ந்த ஜெயக்குமார் (46) என்பதும், குறும்படம் இயக்குனரான இவரை காதலன் மற்றும் உறவினர்கள் மூலம் கொலை செய்ததை பூஜா ஒப்புக்கொண்டார். இதையடுத்து பூஜா கொடுத்த தகவலின்பேரில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்பட்ட அவரது காதலனான தாம்பரம் பகுதியை சேர்ந்த தேவா (24), அவரது நண்பரான சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த அய்யப்பன் (24), பூஜாவின் தோழி துர்கா ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

நடிகை அளித்த வாக்குமூலத்தின்படி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார், 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து சில ஆண்டுகளில் விவகாரத்து பெற்றுள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தங்கியிருந்து குறும்படம் தயாரிக்கும் தொழில் செய்து வந்தள்ளார். சினிமாவில் டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் இன்ஸ்டாகிராம் மூலம் பலரிடம் பேசியதில், பூஜாவுக்கும், ஜெயக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பூஜா தன்னை வைத்து ஒரு குறும்படம் இயக்கும்படி கூறியுள்ளார். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

பூஜாவை தனது வலையில் விழவைக்க நகை, பணம் கொடுத்து உதவியுள்ளார். பின்னர் அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால், பூஜா அந்த காதலை ஏற்க மறுத்ததோடு, தேவா என்பவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து பூஜாவை தொடர்பு கொண்டு, தன்னை காதலிக்குமாறு டார்ச்சர் செய்துள்ளார். தன்னை காதலிக்காவிட்டால், இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதுபற்றி, பூஜா காதலன் தேவாவிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து ஜெயக்குமாரை தீர்த்துக்கட்ட தேவா சதிதிட்டம் தீட்டினார்.

அதற்கு பூஜாவும் ஒப்புக்கொள்ள சென்னையில் ெகாலை செய்தால் எளிதில் போலீசிலும் சிக்கிக் கொள்வோம், வெளி மாவட்டத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ஜெயக்குமாரை கொலை செய்தால் யாருக்கும் தெரியாது என்று முடிவு செய்துள்ளனர். அதன்படி, தேவாவின் பெரியப்பா வீடு உள்ள சு.பில்ராம்பட்டுக்கு ஜெயக்குமாரை வரவழைக்க முடிவு செய்துள்ளனர். கடந்த 3ம்தேதி தேவா கூறியதுபோல், பூஜா ஜெயக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு விழுப்புரம் மாவட்டம் கண்டாட்சிபுரம் அருகே சு.பில்ராம்பட்டு பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகவும், உடனே வந்து அழைத்து செல்லுமாறும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய ஜெயக்குமார் சென்னையில் இருந்து பஸ்சில் விழுப்புரம் வந்திறங்கினார். பின்னர் அங்கிருந்து மற்றொரு பஸ் மூலமாக கண்டாச்சிபுரம் வந்து இறங்கிய அவர், அங்கிருந்து சு.பில்ராம்பட்டுக்கு வழி தெரியாததால் திகைத்து நின்றவரை தேவாவின் உறவினர்களான பிளஸ்1, பிளஸ்2 பயிலும் மாணவர்கள் 2 பேர் பூஜா கூறிய இடமான மலட்டாறு பகுதிக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளனர். பின்னர் அங்கு ஏற்கனவே தயாராக இருந்த தேவா, பூஜா, அய்யப்பன் ஆகியோர் ஜெயக்குமாரை கத்தியால் வெட்டி கொலை செய்து உடலை சற்று தொலையில் உள்ள சவுக்குத் தோப்பில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து தேவா, பூஜா, அய்யப்பன், துர்கா, மற்றும் கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட தேவாவின் பெரியப்பா சடையாண்டி (64), அவரது மனைவி பூங்காவனம் (54), குரு என்கிற குப்புசாமி (19) ஆகிய 7 பேர் மற்றும் 2 பள்ளி மாணவர்களையும் நேற்று காலை போலீசார் கைது செய்தனர். பின்னர், 9 பேரும் திருவெண்ணெய்நல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 7 பேரை கடலூர் சிறையிலும், 2 மாணவர்களை சிறார் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

Related Stories: