கார்த்தி சிதம்பரம் ஆபீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: காரைக்குடியில் பரபரப்பு

காரைக்குடி: காரைக்குடியில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்பி, கார்த்தி சிதம்பரம் எம்பி ஆகியோர் அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்பி, அவரது மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் உள்ளது. இங்கு வாட்ச்மேனாக வடகுடியை சேர்ந்த ஆண்டியப்பன்(48) வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அலுவலகத்தை மூடிவிட்டு தூங்கச் சென்றார்.

பின்னர் வழக்கம்போல் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது அலுவலக வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது. இதில் ஒரு பாட்டில் உடைந்த நிலையிலும், மற்றொரு பாட்டில் முழுதாக கிடந்தது. பாட்டிலின் மூடியில் திரி வைக்கப்பட்டு எரிந்த நிலையில் கிடந்தது. தகவலறிந்து எஸ்பி சிவபிரசாத் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: