தூத்துக்குடி அருகே பயங்கரம்: பிளஸ் 2 மாணவி கொலை ; புகார் வாங்காமல் அலைகழித்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பிளஸ்2 மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குற்றவாளிகளை பிடிக்க டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 2வது நாளாக பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ்(48). இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களது மகள் பிரதீபா(17), குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்தார். தற்போது 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை பிரதீபா எழுதி வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பிரதீபா உடல் உபாதை கழிப்பதற்காக காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் வெகுநேரமாகியும் பிரதீபா வீடு திரும்பாததால் சுப்புராஜ் மற்றும் உறவினர்கள் காட்டுப்பகுதிக்கு சென்று தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து குளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றவர்களிடம், பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து நேற்று காலை விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற சுப்புராஜ் மற்றும் உறவினர்களிடம் இன்ஸ்பெக்டர் பிரவீணா புகார் வாங்க மறுத்து புகார் கொடுக்க சென்றவர்களிடம் அலட்சியமாக பதில் கூறியதால் உறவினர்கள் ஆவேசம் அடைந்தனர். இதனால் நீண்ட நேரம் கழித்து குளத்தூர் காவல் நிலையத்திலேயே புகார் அளிக்குமாறு கூறி அனுப்பினர். இதையடுத்து குளத்தூர் காவல் நிலையத்திற்கு வந்த சுப்புராஜ், உறவினர்களிடம் போலீசார் புகார் மனு வாங்கியுள்ளனர்.

இதனிடையே வேடநத்தம் கிராம காட்டுப்பகுதியில் முகத்தில் காயங்களுடன் இறந்த நிலையில் பிரதீபா உடல் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து குளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணவி அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மாணவி கொலையான தகவல் காட்டுத்தீப்போல் பரவியது. ஆத்திரமடைந்த சுப்புராஜ் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரண்டு சென்று வேடநத்தம் – குறுக்குச்சாலை ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். மாலை 4 மணி முதல் இரவு 12.30 மணி வரை போராட்டம் நீடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மதன், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் விரைந்துவந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவிக்கு நீதி கிடைக்கவும், புகார் அளிக்கச் சென்ற சுப்புராஜ் உறவினர்களிடம் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனிடையே மாணவி கொலை சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க விளாத்திகுளம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், சந்தேகத்தின்பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புகாரை வாங்காமல் அலைகழித்த இன்ஸ்பெக்டர் பிரவீணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாணவி கொலையை தொடர்ந்து அங்கு இன்று 2வது நாளாக பதற்றம் நீடிப்பதால் வேடநத்தம் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மாணவி படித்த பள்ளியில் சோகம்
கொலையான மாணவி பிரதீபா, குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்தார். 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் சிறந்த மாணவியாக தேர்வு ஆகியுள்ளார். தற்போது 12ம் வகுப்பு தேர்வு தொடங்கியுள்ள நிலையில் இதுவரை 4 தேர்வுகள் எழுதி உள்ளார். இன்று (வியாழன்) பிளஸ்2 தேர்வு எழுத இருந்த நிலையில் தேர்வுக்காக ஆர்வமுடன் படித்து வந்தார். இந்நிலையில் மாணவி, மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர், உறவினர்கள் மட்டுமின்றி அவர் படித்து வந்த பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: