காதலிக்குமாறு தொந்தரவு செய்த குறும்பட இயக்குநர் வெட்டிக் கொலை: துணை நடிகை உள்பட 9 பேர் அதிரடி கைது

திருக்கோவிலூர்: விழுப்புரம் அருகே, சவுக்குத் தோப்பில் காயங்களுடன் ஆண் பிணம் கிடந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. துணை நடிகையை காதலிக்குமாறு தொந்தரவு செய்ததால் தீர்த்துக் கட்டியது அம்பலமான நிலையில் இவ்வழக்கில் அவரது காதலன் உள்பட 9 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்த சு.பில்ராம்பட்டு மதுரா வேடாலம் கிராம எல்லைப்பகுதியில் உள்ள ஒரு சவுக்குத் தோப்பில் கடந்த 7ம் தேதி அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலின் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்துபோன நபரின் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததால் அவரை யாரோனும் வெட்டிக் கொலை செய்துவிட்டு உடலை சவுக்குத்தோப்பில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என போலீசார் கருதினர்.

பின்னர், அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார், சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடததினர். அதன்படி சம்பவம் நடந்த இடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் கடந்த 3ம் தேதி இரவு கண்டாச்சிபுரம் பஸ்நிறுத்தம் பகுதியில் இறங்கிய நபர், வழிதெரியாமல் நீண்டநேரம் யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அவர் தான் கொலை செய்யப்பட்ட நபராக இருக்கலாம் என சந்தேகித்தனர். தொடர்ந்து அவரது செல்போன் அழைப்புகள் குறித்தும், பதிவான விவரங்கள் தொடர்பாகவும் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

விசாரணையில், அந்த நபர் சென்னையில் இருந்து பஸ்சில் புறப்படும்போதும், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இறங்கும்போதும், பின்னர் அங்கிருந்து கண்டாச்சிபுரம் பஸ் நிலையத்தில் இறங்கும்போதும் அவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரே நபர் பலமுறை பேசியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த நபருடன் செல்போனில் பேசியது சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த சினிமா துணை நடிகையான பதம் மகள் பூஜா (21) என்பது தெரிய வந்தது. உடனே சென்னை முகப்பேர் பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், பூஜாவை மடக்கிப்பிடித்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், திருநெல்வேலி மாவட்டம் கருங்குளம் அருகே உள்ள நம்பைகுறிச்சியை சேர்ந்த மாணிக்கம் மகன் ஜெயக்குமார் (46) என்பதும், குறும்படம் இயக்குனரான இவரை தனது காதலன் மற்றும் உறவினர்கள் மூலம் கொலை செய்ததையும் பூஜா ஒப்புக்கொண்டார்.

இதையடுதது பூஜா கொடுத்த தகவலின்பேரில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்பட்ட அவரது காதலனான தாம்பரம் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் தேவா (24), அவரது நண்பரான சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த அய்யப்பன் (24), பூஜாவின் தோழி துர்கா ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கொலை செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு 23 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து சில வருடங்களில் விவகாரத்து பெற்றுள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தங்கியிருந்து குறும்படம் தயாரிக்கும் தொழில் செய்து வந்தள்ளார். மேலும், சினிமாவில் டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் இன்ஸ்டாகிராம் மூலம் பலரிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த சூழலில் இன்ஸ்டாகிராம் மூலம் பூஜாவுக்கும், ஜெயக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பூஜா தன்னை வைத்து ஒரு குறும்படம் இயக்கும்படி ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி பூஜாவை தனது வலையில் விழவைக்க அவருக்கு ஜெயக்குமார் நகை, பணம் கொடுத்து உதவியுள்ளார்.

பின்னர் சில நாட்கள் கழித்து பூஜாவை தொடர்பு கொண்டு நான் உன்னை காதலிப்பதாகவும், உன்னையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால், பூஜா அந்த காதலை ஏற்க மறுத்ததோடு, தேவா என்பவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் அதை பொருட்படுத்தாத ஜெயக்குமார், அடிக்கடி பூஜாவை தொடர்பு கொண்டு, தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். அதோடு தன்னை காதலிக்காவிட்டால், நாம் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதுபற்றி, பூஜா தனது காதலன் தேவாவை தொடர்பு கொண்டு அழுது புலம்பியபடி கூறியுள்ளார். இதைக் கேட்ட தேவா தன்னுடைய காதலுக்கு இடையூறாக இருக்கும் ஜெயக்குமாரை தீர்த்துக்கட்ட சதிதிட்டம் தீட்டினார். அதற்கு பூஜாவும் ஒப்புக்கொள்ள சென்னை போன்ற நகர பகுதிகளில் ெகாலை செய்தால் எளிதில் வெளியே தெரிந்துவிடும், போலீசிலும் சிக்கிக் கொள்வோம் என்பதால் அதை மறைக்கும் வகையில் ஏதேனும் வெளி மாவட்டத்தில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ஜெயக்குமாரை கொலை செய்தால் யாருக்கும் தெரியாது என்று இருவரும் சேர்ந்து சதிதிட்டம் போட்டுள்ளனர். அதன்படி, தேவாவின் பெரியப்பா வீடு அருகே உள்ள சு.பில்ராம்பட்டு பகுதியில் கொலை சதியை நிறைவேற்ற திட்டம் வகுத்துள்ளனர்.

கடந்த 3ம்தேதி தேவா கூறியதுபோல், பூஜா ஜெயக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை விழுப்புரம் மாவட்டம் கண்டாட்சிபுரம் அருகே சு.பில்ராம்பட்டு பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை வந்து உடனே அழைத்து செல்லுமாறும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். இதை நம்பிய ஜெயக்குமார் சென்னையில் இருந்து பஸ்சில் புறப்பட்டு விழுப்புரம் வந்திறங்கினார். பின்னர் அங்கிருந்து மற்றொரு பஸ் மூலமாக கண்டாச்சிபுரம் வந்து இறங்கிய அவர், அங்கிருந்து சு.பில்ராம்பட்டுக்கு வழி தெரியாததால் அவருக்கு தேவாவின் உறவினர்களான பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் 2 பேர் உதவி செய்து பூஜா கூறிய இடமான மலட்டாறு பகுதிக்கு ஜெயக்குமாரை அழைத்துச் சென்று விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

பின்னர் அங்கு ஏற்கனவே தயாராக இருந்த தேவா, பூஜா, தேவாவின் நண்பரான அய்யப்பன் ஆகியோர் ஜெயக்குமாரை கத்தியால் வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அங்கிருந்து சற்று தொலையில் உள்ள சவுக்குத் தோப்பில் வீசிவிட்டு எதுவுமே நடக்காததுபோல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து தேவா, பூஜா, அய்யப்பன், துர்கா, மற்றும் கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட தேவாவின் பெரியப்பாவான மேல் வெங்காமூரை சேர்ந்த கோபால் மகன் சடையாண்டி (64), அவரது மனைவி பூங்காவனம் (54), குரு என்கிற குப்புசாமி (19) ஆகிய 7 பேரையும் நேற்றிரவு கைது செய்த போலீசார், அவர்களை திருவெண்ணெய்நல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். கைதான நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 2 மாணவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: