கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் மைதானமாக பயன்படுத்தும் இடத்தில் கட்டுமான பணிகள்

*எதிர்ப்பு தெரிவித்து ஆர்டிஓ ஆபீசில் மனு

கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் மைதானமாக பயன்படுத்தும் இடத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.கோவில்பட்டி காந்தி நகரில் நகராட்சிக்கு சொந்தமான உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளி மாணவர்கள், இங்குள்ள சிட்கோ நிறுவனத்துக்கு சொந்தமான காலியிடத்தை மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி விளையாட்டு வகுப்புகளின்போது, மாணவ -மாணவிகள் விளையாடுவது வழக்கம்.

இந்நிலையில் சிட்கோ நிறுவனம், காலியிடத்தில் தற்போது குடோன்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், மைதானத்தை பள்ளிக்கு விளையாட்டு மைதானமாக வழங்க வலியுறுத்தியும் நேற்று முன்தினம் காந்தி நகர் பகுதி மக்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி, நகர்மன்ற உறுப்பினர் சீனிவாசன் மற்றும் காந்தி நகர் பகுதி மக்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினியிடம் வழங்கிய மனுவில், கோவில்பட்டி காந்தி நகரில் செயல்பட்ட அரசு துவக்கப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இப்பகுதியில் உள்ள சிட்கோ நிறுவனத்துக்கு சொந்தமான இடம் காலியாக இருப்பதால் அதனை மாணவ- மாணவிகள் மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதால் பெரிய வாகனங்கள் வர முடியாததால், இப்பகுதியில் செயல்பட்டு வந்த தொழில்கள் முடங்கி, இங்கிருந்து வெளியேறிவிட்டன. இதனால் பல குடோன்களும், கடைகளும் காலியாகத்தான் உள்ளன.

தற்போது காலி மைதானத்தில் சிட்கோ நிறுவனம் குடோன்கள், கடைகள் கட்டி வாடகைக்கு விடுவதாக கூறுவது, அரசு பணத்தை விரயமாக்குவதாகும். இந்த கட்டிடங்களால் எந்த ஒரு பயனும் இல்லை. எனவே பொதுமக்கள், பெற்றோரிடம் விசாரணை செய்து, சிட்கோ நிறுவன கட்டுமான பணிகளை நிறுத்தி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், அந்த இடத்தை விளையாட்டு மைதானமாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் மைதானமாக பயன்படுத்தும் இடத்தில் கட்டுமான பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: