உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் காவலர்களுக்கு நலத் திட்டங்களை செயல்படுத்த புதிய காவல் ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு காவல்துறை குற்றங்களை தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத் தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாக செயல்பட வேண்டும் என்பதில் கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் அரசு உறுதியாக உள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த வளம், பொருளாதார வளர்ச்சி, அமைதியான சூழல், சமூக நல்லிணக்கத்தை பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளில் காவல்துறை தனது முயற்சியை தொடர்ந்து தொய்வில்லாமல் செய்து கொண்டிருக்கிறது. மாநிலத்தின் அமைதியை பேணி பாதுகாத்து, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் முக்கிய பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் மேலும் சிறக்க பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. காவலர்களின் நலன், காவலர் – பொதுமக்கள் இடையேயான நல்லுறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களை விரிவாக ஆய்வு செய்யும் பொருட்டு கடந்த 1969, 1989 மற்றும் 2006ம் ஆண்டுகளில், கலைஞர் தலைமையிலான அரசு, முறையே மூன்று காவல் ஆணையங்களை அமைத்து, அவற்றின் பரிந்துரைகளை பெற்று காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்தது.அதன் தொடர்ச்சியாக திமுக, தனது 2021 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் “மீண்டும் திமுக அரசு அமைந்ததும், நான்காவது முறையாக போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு, ஒரு காலவரையறைக்குள் அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும்’’ என வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, கடந்த 13.9.2021 அன்று சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் உரையாற்றுகையில், “காவலர் – பொதுமக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல் துறை பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களுக்கு தேவையான திட்டங்களையும், புதிய பயிற்சி முறைகளையும் பரிந்துரைக்கும் நோக்கத்துடன் ‘காவல் ஆணையம்’ ஒன்று மீண்டும் அமைக்கப்படும்’’ என அறிவித்திருந்தார்.இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், புதிதாக காவல் ஆணையம் ஒன்றை தற்போது அமைத்திடவும், அந்த காவல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம்  தலைவராகவும், கா.அலாவுதீன் (ஐஏஎஸ் ஓய்வு), கே.ராதாகிருஷ்ணன் (ஐபிஎஸ் ஓய்வு), மனநல மருத்துவர் சி.ராமசுப்பிரமணியம், முன்னாள் பேராசிரியர் நளினி ராவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும், காவல் துறை (குற்றப்புலனாய்வு) கூடுதல் இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உறுப்பினர்-செயலராகவும் நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இந்த ஆணையம், காவலர்களின் நலன் மற்றும் காவல்துறையின் பல்வேறு அம்சங்களை விரிவாக ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் அரசுக்கு தனது பரிந்துரைகளை அளிக்கும். காவல்துறையின் செயல்பாடுகளை சிறப்பாக மேம்படுத்துவதற்கும், இணையவழி குற்றங்களை தடுத்திடவும், சேவை வழங்குவதில் மனிதாபிமானத்துடன் கூடிய நட்புறவோடு பொதுமக்களை அணுகுவதற்கும், உரிய நடவடிக்கைகள் மூலமாக காவல்துறையினரின் சேவையை மேலும் வலுவூட்டுவதற்கும், இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் அமைந்திடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் காவலர்களுக்கு நலத் திட்டங்களை செயல்படுத்த புதிய காவல் ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: