பிச்சைக்காரன் 2- திரை விமர்சனம்

கடந்த 2016ல் சசி இயக்கத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் தமிழிலும், தெலுங்கிலும் அமோக வரவேற்பு பெற்றது. தற்போது அதன் 2ம் பாகத்தை விஜய் ஆண்டனி முதல்முறையாக இயக்கியுள்ளார். இசை, எடிட்டிங் ஆகிய பொறுப்புகளை ஏற்று ஹீரோவாக நடித்துள்ளார். ஒரு கோடீஸ்வரன் பிச்சைக்காரனாவது முதல் பாகத்தின் கதை. ஒரு பிச்சைக்காரன் கோடீஸ்வரனாவது 2ம் பாகத்தின் கதை. இந்தியாவிலேயே 7வது கோடீஸ்வரரான விஜய் குருமூர்த்தியின் (விஜய் ஆண்டனி) ஒரு லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை அபகரிக்க அவருக்கு நெருக்கமான நண்பர்கள் தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பெராடி திட்டமிடுகின்றனர். விஜய் குருமூர்த்தியை துபாய்க்கு வரவழைத்து, அங்கு அவரது மூளையை அகற்றிவிட்டு, ேவறொருவர் மூளையைப் பொருத்தி, தங்களின் சொல்படி ஆட்டுவிக்க முயற்சிக்கின்றனர். இதற்காக அவர்கள் பிச்சைக்காரன் சத்யாவை (விஜய் ஆண்டனி) கடத்திக்கொண்டு துபாய்க்கு வருகின்றனர். மூளை மாற்று அறுவைசிகிச்சையை டாக்டர் கிட்டி வெற்றிகரகமாக நடத்துகிறார். விஜய் குருமூர்த்தியின் உடல், சத்யாவின் மூளை என்று புதிய மனிதனாக வெளியே கிளம்பும் சத்யா, சதி செய்த நண்பர்களை தீர்த்துக்கட்டிவிட்டு, கோடீஸ்வரன் விஜய் குருமூர்த்தியாக அவரது தொழில் சாம்ராஜ்ஜியத்துக்குள் செல்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

ஆள்மாறாட்டம் என்ற பழைய கான்செஃப்ட்டில் மூளை மாற்று அறுவை சிகிச்சை, பிச்சைக்காரன், கோடீஸ்வரன் என்று புதிதாக சில விஷயங்களைச் சேர்த்து, மாஸ் என்டர்டெயின்மென்ட் படத்தைக் கொடுக்க முயற்சித்துள்ள விஜய் ஆண்டனி, நடிப்பு மற்றும் இயக்கத்தை இன்னும் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இப்படம் சுட்டிக்காட்டுகிறது. விஜய் குருமூர்த்தி போன்ற தோற்றம் சத்யாவுக்கு இருக்கும்போது, ஆள்மாறாட்டம் செய்வதற்கு அது ஒன்றே போதும். பிறகு எதற்கு மூளை மாற்று அறுவைசிகிச்சை என்று தெரியவில்லை. நல்ல ஆரோக்கியமான உடல்நிலையுடன் இருக்கும் சத்யா எதற்குப் பிச்சை எடுக்க வேண்டும்? திருமணம் செய்துகொள்ளாத விஜய் குருமூர்த்தியின் காதலி காவ்யா தாப்பர் வயிற்றில் வளரும் குழந்தை எப்படி விஜய் குருமூர்த்தியின் சொத்துக்கு வாரிசாக முடியும்? பிச்சைக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக தொடங்கப்படும் ‘ஆன்டி பிகில்’ என்ற திட்டம் அபத்தமாக இருக்கிறது. இப்படி எந்த லாஜிக்கைப் பற்றியும் கவலைப்படாமல், தன் விருப்பத்துக்கு ஏற்ப கதை எழுதி இயக்கியுள்ளார் விஜய் ஆண்டனி.

எடிட்டராகவும் விஜய் ஆண்டனி அதிக கவனம் பெறவில்லை. நடிப்பிலும் பெரிய மாற்றம் இல்லை. முகத்தில் கருப்பு மை பூசிக்கொண்டால் பிச்சைக்காரன். இரண்டு கேரக்டர்களிலும் சோகம் சுமந்த முகத்துடன் வலம் வருகிறார். காவ்யா தாப்பர் விரல்விட்டு எண்ணக்கூடிய காட்சிகளில் வருகிறார். யோகி பாபு அவ்வப்போது வந்து கலகலக்க வைக்கிறார். பின்னணி இசையில் ‘பிச்சைக்காரன்’ முதல் பாகத்தின் தீம் மியூசிக்கையே விஜய் ஆண்டனி காப்பி, பேஸ்ட் செய்துள்ளார். பாடல்கள் ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண் எதற்காக இக்கதைக்கு கருஞ்சிவப்பு கலர் டோனை தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. விஎப்எஸ் தொழில்நுட்பங்களின் குறைபாடு பளிச்சென்று தெரிகிறது.

The post பிச்சைக்காரன் 2- திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: