அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி பெற்று அந்த அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகளில் ஆடி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் இரு போட்டிகளில் வென்ற இந்தியா 3வது போட்டியிலும் வென்று ஒயிட்வாஷ் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் அகமதாபாத் நகரில் நேற்று 3வது ஒரு நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் களமிறங்கினர். 2வது போட்டியில் 119 ரன் விளாசிய ரோகித் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார்.
இருப்பினும் சுப்மன் கில்லும், அவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோஹ்லியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 55 பந்தில் 52 ரன் எடுத்தபோது கோஹ்லி அவுட்டானார். அதன் பின் வந்த ஷ்ரேயஸ் ஐயரும் அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்தி 78 ரன் குவித்து வெளியேறினார். பின் வந்தோரும் சிறப்பாக ஆடி மளமளவென ரன்களை குவித்தனர். 50 ஓவர் முடிவில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன் குவித்தது. துவக்க வீரர் சுப்மன் கில் 102 பந்துகளில் 3 சிக்சர், 14 பவுண்டரிகளுடன் 112 ரன் குவித்தார். இதையடுத்து, 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து வீரர்கள் களமிறங்கினர். துவக்க வீரர்கள் பில் சால்ட் 23, பென் டக்கெட் 34 ரன் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்து நல்ல துவக்கத்தை தந்தனர்.
இருப்பினும் பின் வந்த வீரர்கள் யாரும் சிறப்பாக ஆடாததால் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 34.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட இங்கிலாந்து அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 142 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதோடு, 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து சாதனையை படைத்தது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அக்ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சதம் விளாசிய சுப்மன் கில் தொடர் மற்றும் ஆட்ட நாயகன்.
சாதனை நாயகன் கில்
இங்கிலாந்து அணியுடன் நடந்த 3வது ஒரு நாள் போட்டி சுப்மன் கில்லுக்கு 50வது போட்டி. இந்த போட்டியில் தனது 7 சதத்தை விளாசி சரித்திர சாதனையை அவர் படைத்துள்ளார். 50வது போட்டியில் சதம் விளாசிய முதல் இந்தியர் அவரே. தவிர, 50 போட்டிகளுக்குள் 7வது சதம் விளாசிய இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்து வித போட்டிகளிலும் சதம் விளாசிய 5வது வீரர் என்ற சாதனையும் கில் வசமாகி உள்ளது. பாஃப் டுப்ளெசிஸ், டேவிட் வார்னர், பாபர் அஸாம், குவின்டன் டிகாக் ஆகியோரும் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர். அதுமட்டுமின்றி, ஒரு நாள் வரலாற்றில் 2,500 ரன்களை அதிவிரைவாக எட்டிய வீரராக கில் உருவெடுத்துள்ளார்.
The post 3வது போட்டியிலும் அபாரம்: இங்கிலாந்து ஒயிட்வாஷ்; இந்தியா ‘பக்கா மாஸ்’ appeared first on Dinakaran.
