கும்மிடிப்பூண்டி இ-சேவை மையத்தில் பாலூட்டும் அறையின்றி அவதிக்குள்ளாகும் பெண்கள்

 

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி இ சேவை மையத்தில் பாலூட்டும் அறையின்றி பெண்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு மாதர்பாக்கம், கண்ணன்கோட்டை, முக்கரம்பாக்கம், புதுவாயில், மேல்முதலம்பேடு, காரணி, ரெட்டம்பேடு, போந்தவாக்கம், ஆரம்பாக்கம், பண்பாக்கம், பெரிய ஒபுளாபுரம், எளாவூர், புதுகும்மிடிப்பூண்டி, ஆத்துப்பாக்கம், வழுதலம்பேடு, மேலகழனி உள்ளிட்ட 61 ஊராட்சிகளைச் சேர்ந்த மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்கின்றனர்.

வருவாய்த்துறை மூலம் மின்னாளுமை திட்டத்தின் கீழ் இ சேவை மையம் வழியாக சாதிச் சான்றிதழ், வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைஉள்ளிட்ட சான்றுகளை விண்ணப்பிக்க தினந்தோறும் 200க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அதில் பெரும்பாலான இளம்பெண்கள் குழந்தைகளுடன் ஆதாரில் பெயர் சேர்த்தல், பெயர் மாற்றம் தொடர்பாக வருகின்றனர்.

அப்படி வரும்போது அடிப்படை வசதியான குடிநீர், தாய்மார்களுக்கு பால் ஊட்டும் அறை இல்லாமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக பல்வேறு புகார் மனு அளித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு செய்து குடிநீர் வசதி, பால் ஊட்டும் அறை அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கும்மிடிப்பூண்டி இ-சேவை மையத்தில் பாலூட்டும் அறையின்றி அவதிக்குள்ளாகும் பெண்கள் appeared first on Dinakaran.

Related Stories: