சித்தூர்: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று வந்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘ஆந்திர மாநில அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மட்டுமே மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு திட்டம் செயல்பட்டு வருகிறது. அதேபோல் ஆந்திராவில் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்1, பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளேன்.
வரும் யுகாதி பண்டிகை அன்று ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம் திட்டத்தை செயல்படுத்த உள்ளேன்’ என்றார். நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமு அரசு அறிமுகப்படுத்தியது. இதை பின் பற்றி பல்வேறு மாநிலங்கள் மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post தமிழ்நாட்டை போல் ஆந்திராவில் பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்: – முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு appeared first on Dinakaran.