எச்எம்பிவி பரவல் எதிரொலி சுவாச நோய்கள் கண்காணிப்பு மாநில அரசுகளுக்கு அறிவுரை

புதுடெல்லி: சீனாவில் குழந்தைகளுக்கு வேகமாக பரவி வரும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (எச்எம்பிவி) இந்தியாவிலும் நுழைந்துள்ளது. தமிழ்நாட்டில் 2 குழந்தைகள் உட்பட நாடு முழுவதும் 5 பேருக்கு எச்எம்பிவி தொற்று நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 2 சிறுவர்களுக்கு எச்எம்பிவி வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின் அவர்கள் வீடு திரும்பிய நிலையில், மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் நாக்பூர் எய்ம்சில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கிடையே, ஒன்றிய சுகாதார செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா நேற்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நடத்திய வீடியோ கான்பிரன்சிங் கூட்டத்தில், இன்புளூயன்சா போன்ற காய்ச்சல் (ஐஎல்ஐ), கடுமையான சுவாச நோய் (எஸ்ஏஆர்ஐ) ஆகியவற்றின் கண்காணிப்பை தீவிரமாக்க அறிவுறுத்தி உள்ளார். ஐஎல்ஐ, எஸ்ஏஆர்ஐ ஆகியவற்றின் பாதிப்புகள் இதுவரை வழக்கத்திற்கு மாறான உயர்வை குறிக்கவில்லை என்று கூட்டத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டு முதல் உலகளவில் இந்த வைரஸ் இருப்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என ஸ்ரீவஸ்தவா கூறினார்.

The post எச்எம்பிவி பரவல் எதிரொலி சுவாச நோய்கள் கண்காணிப்பு மாநில அரசுகளுக்கு அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: