70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5ம் தேதி தேர்தல்: பிப்.8ல் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 2014 முதல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. ஏற்கனவே அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் சிறைக்குச் சென்றார். இதையடுத்து அவர் தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீனில் வெளியில் உள்ளார். இதைத்தொடர்ந்து தனது பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா நிலையில், தற்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வராக அடிசி இருந்து வருகிறார்.

மேலும் வரும் பிப்ரவரி மாதத்துடன் டெல்லி சட்டசபைக்கான பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. இதுபோன்ற சூழலில் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலுக்காக ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தங்களது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார், ஆணையர்கள் கணேஷ் குமார் மற்றும் சஜ்பீர் சந்த் ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தனர். அதில் ‘‘டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். இதற்கான மனுதாக்கல் வரும் 10ம் தேதி துவங்குகிறது.

மனுதாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 17ம் தேதி ஆகும். ஜனவரி 18ல் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 70 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ம் தேதி எண்ணப்படும். டெல்லியை பொருத்தவரையில் மொத்தம் 1.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது என்று தெரிவித்தார்.

* வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு வாய்ப்பு கிடையாது
தேர்தல் தலைமை ஆணையர் ராஜீவ்குமார் வாக்கு பதிவு இயந்திரங்கள் குறித்து கூறும்போது, ‘‘வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் பல்வேறு தீர்ப்புகள் மூலம் உறுதி செய்துள்ளது. அதில் வைரஸ் மூலமாக வாக்குகளை திருத்த முடியாது.மேலும் காலாவதியான வாக்குச் சீட்டு நடைமுறை தேவையற்றது.

வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பிறகு கோடிக்கணக்கான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக மக்களவைத் தேர்தலில் தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் பார்ம்-17சி வழங்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை என்பது அதனை ஒப்பிட்ட பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. எனவே வாக்கு எண்ணிக்கை சதவீதத்தில் மாற்றம் உள்ளது என்ற குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் இ.வி.எம் இயந்திரத்தில் வைரஸ் புகுத்த முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

* மும்முனை போட்டி
டெல்லி சட்டமன்ற தேர்தலை பொருத்தமட்டில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜ மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று பிரதான கட்சிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிடுகின்றன. எனவே டெல்லி சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி மட்டுமே நிலகிறது.

* டெல்லிக்கு பட்ஜெட்டில் சலுகைகள் கூடாது
2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், டெல்லி தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுவதால் நிதி ஒதுக்கீடு உட்பட டெல்லிக்குக்கான எந்த சலுகைகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என்று ஒன்றிய அரசுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தேர்தல் தேதி அட்டவணை
* வேட்பு மனு தாக்கல் தொடக்கம் ஜனவரி 10ம் தேதி
* வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 17ம் தேதி
* வேட்பு மனுக்கள் பரிசீலனை ஜனவரி 18ம் தேதி
* வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஜனவரி 20ம் தேதி
* வாக்குப்பதிவு பிப்ரவரி 5ம் தேதி
* வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி

The post 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5ம் தேதி தேர்தல்: பிப்.8ல் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: