இந்த மகரவிளக்கு காலத்தில் நேற்று இரவு வரை 9 நாளில் 7.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். வரும் 16ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே முடிவடைந்து விட்டதால் பெரும்பாலான பக்தர்கள் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கடந்த சில தினங்களாக தினமும் 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உடனடி முன்பதிவு வசதியை பயன்படுத்தி தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் வரும் 11ம் தேதி நடத்தப்படுகிறது. எருமேலியில் பக்தர்கள் தங்களது உடலில் வண்ண சாயங்களை பூசி நடனமாடுவார்கள். திருவாபரண ஊர்வலம் வரும் 12ம் தேதி பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து புறப்படுகிறது.
உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு: மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று (8ம் தேதி) முதல் 15ம் தேதி வரை உடனடி முன்பதிவு எண்ணிக்கை 10 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை ஜனவரி 12ம் தேதி 60 ஆயிரமாகவும், 13ம் தேதி 50 ஆயிரமாகவும், 14ம் தேதி 40 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
* வனப்பாதையில் சிக்கிய 4 தமிழக பக்தர்கள் மீட்பு
சபரிமலைக்கு நேற்று முன்தினம் புல்மேடு வனப்பாதை வழியாக சென்ற சென்னையைச் சேர்ந்த லீலாவதி, அந்தோணி, பெரியசாமி மற்றும் மதுரையை சேர்ந்த லிங்கம் ஆகியோருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இரவு 8 மணியளவில் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இரவு நேரத்தில் அந்தப் பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் வனத்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். நீண்டநேர தேடுதல் வேட்டைக்குப் பின் இரவு 11 மணியளவில் அவர்கள் மீட்கப்பட்டு சபரிமலை சன்னிதானத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.
* வனப்பாதையில் செல்லும் நேரம் குறைப்பு
புல்மேடு வனப்பாதை வண்டிப்பெரியார் சத்திரம் பகுதியில் இருந்து தொடங்குகிறது. இது அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும். எனவே சத்திரம் பகுதியில் இருந்து காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், அழுதக்கடவு மற்றும் முக்குழியில் இருந்து மாலை 4 மணி வரையிலும் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வருடம் புல்மேடு வனப்பாதை வழியாக செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது. பலமுறை பக்தர்கள் வழி தெரியாமல் அடர்ந்த வனத்தில் சிக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் சத்திரம் பகுதியில் இருந்து காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post சபரிமலையில் 9 நாளில் 7.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்: 11ம் தேதி எருமேலி பிரசித்தி பெற்ற பேட்டை துள்ளல் appeared first on Dinakaran.