புதுடெல்லி : டெல்லியில் பிரசாரத்தின் போது, முதல்வர் அடிசியின் குடும்ப பெயரான ‘மர்லினா’ என்பதை ‘சிங்’ என தற்போது மாற்றியிருப்பதாக’ கல்காஜி ேவட்பாளர் ரமேஷ் பிதூரி கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் அடுத்த மாதம் நடக்கும் சட்டமன்ற தேர்தலில், கல்காஜி தொகுதியில் முதல்வர் அடிசியை எதிர்த்து பாஜ வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ, எம்பி.யான ரமேஷ் பிதூரி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2 நாட்களுக்கு முன்பு இவர் பிரசாரம் செய்த போது, ‘அடுத்த மாதம் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றால், இத்தொகுதியில் உள்ள சாலைகள் அனைத்தையும் பிரியங்கா காந்தியின் கன்னத்தை போல் வழவழப்பாக போடுவேன்,’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதனைதொடர்ந்து, நான் பேசியது யாரையாவது புண்படுத்தி இருந்தால்,மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறி பிதூரி மன்னிப்பையும் கோரினார்.
இந்த சர்ச்சை முடிவதற்குள், அடுத்த சர்ச்சைக்குள் மீண்டும் பிதூரி சிக்கியுள்ளார். இதே கல்காஜி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் அடிசியின் குடும்ப பெயர் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அவா் கூறுகையில்,‘அடிசி தனது குடும்ப பெயரான ‘மர்லினா’ என்பதை ‘சிங்’ என மாற்றியுள்ளார். முன்பு அடிசி தனது பெயருக்கு பின்னால் குடும்ப பெயராக ‘மர்லினா’ என பயன்படுத்தி வந்தார். தற்போது அதனை ‘சிங்’ என மாற்றியுள்ளார். இது தான் அவர்களுடைய குணாதிசயம்’ என்று பிதூரி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
The post பிரியங்காவை தொடர்ந்து டெல்லி முதல்வர் அடிசிக்கு எதிராக பிதூரி சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.